முப்பெரும்தேவியர் ஆலய சித்திரை திருவிழாவில் அக்னிச்சட்டி ஊர்வலம்
புளியங்குடி முப்பெரும்தேவியர் ஆலய சித்திரை திருவிழாவில் அக்னிச்சட்டி ஊர்வலம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
புளியங்குடி
புளியங்குடி முப்பெரும்தேவியர் ஆலயமான பெரியபாளையத்து பவானி அம்மன், பாலநாகக்கன்னி அம்மன், பாலநாகம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 24-ந் தேதி கால்நாட்டு நிகழ்ச்சியுடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் முப்பெரும்தேவியருக்கு சிறப்பு பூஜைகளும் மற்றும் ஆன்மிக சொற்பொழிவு, முளைப்பாரி கும்மிப்பாட்டு நிகழ்ச்சிகளும் நடந்தது.
8-ம் திருநாளன்று சாலைவிநாயகர் கோவிலில் இருந்து கோவில் குருநாதர் சக்தியம்மா தலைமையில் 108 தீர்த்தக்குடம், 208 பால்குடம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கோவிலை அடைந்தது. பின்னர் பவானி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் நடந்தது.
இரவு 7 மணிக்கு சாலைவிநாயகர் கோவிலில் இருந்து காப்புகட்டி விரதம் இருந்த பக்தர்கள் 250 அக்னிச்சட்டிகள், அக்னி காவடிகள், முத்துப்பெட்டி, பூப்பெட்டி எடுத்து நகரின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்று கோவிலை அடைந்து நேர்த்திக்கடனை செலுத்தினர். நள்ளிரவு 12 மணிக்கு கோவில் முன்பு உள்ள ரத்தக்காளியம்மனுக்கு சாமப்பூஜை, படையல் அம்மனுக்கு அலங்கார தீபாராதனை நடந்தது. சிகர நிகழ்ச்சியாக நேற்று காலை 7 மணிக்கு ஏராளமான பெண்கள் பொங்கலிட்டு வழிபாடு நடத்தினர்.
8 மணிக்கு சாலைவிநாயகர் கோவிலில் இருந்து பக்தர்கள் முளைப்பாரி எடுத்துவந்து கும்மிஅடித்தல் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் கோவில் வளாகத்தில் முளைப்பாரி கரைத்தல் நிகழ்ச்சி நடந்தது. மதியம் 1 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு பூஜையை தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 5 மணிக்கு மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் குருநாதர் சக்தியம்மா மற்றும் விழா கமிட்டியாளர்கள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story