கேரளாவுக்கு கடத்த முயன்ற 2 ஆயிரம் லிட்டர் ரே‌ஷன் மண்எண்ணெய் பறிமுதல்


கேரளாவுக்கு கடத்த முயன்ற 2 ஆயிரம் லிட்டர் ரே‌ஷன் மண்எண்ணெய் பறிமுதல்
x
தினத்தந்தி 3 May 2018 10:45 PM GMT (Updated: 3 May 2018 5:50 PM GMT)

கொல்லங்கோடு அருகே கேரளாவுக்கு கடத்த முயன்ற 2 ஆயிரம் லிட்டர் ரே‌ஷன் மண்எண்ணெய்யை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கருங்கல்,

குமரி மாவட்டத்தில் ரே‌ஷன் கடைகளில் இலவசமாக வழங்கப்படும் அரிசி, மானிய விலையில் வழங்கப்படும் மண்எண்ணெய் ஆகியவற்றை சிலர் மலிவு விலைக்கு வாங்கி கேரளாவுக்கு கடத்தி சென்று அதிக விலைக்கு விற்பனை செய்து வருகிறார்கள். இதை தடுக்க போலீசார் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் ரோந்து சென்று கடத்தல் பொருட்களை பறிமுதல் செய்து வருகிறார்கள்.

இந்தநிலையில், மாவட்ட வழங்கல் அலுவலர் சந்திரன் தலைமையில், பறக்கும்படை தனி தாசில்தார் ராஜசேகர், துணை தாசில்தார் முருகன் மற்றும் அதிகாரிகள் நேற்று அதிகாலை கொல்லங்கோடு அருகே கிராத்தூர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, அந்த வழியாக சென்ற மினி டெம்போவை நிறுத்துமாறு கைகாட்டினர். ஆனால், டிரைவர் வண்டியை நிறுத்தாமல் வேகமாக சென்றார். உடனே, அதிகாரிகள் தங்களின் ஜீப்பில் மினி டெம்போவை துரத்தி சென்றனர்.

அதிகாரிகள் பின்தொடர்ந்து வருவதை கண்டதும் டிரைவர் வண்டியை நிறுத்தி விட்டு இறங்கி தப்பி ஓடினார். அந்த வண்டியை சோதனையிட்ட போது அதில் பிளாஸ்டிக் கேன்களில் 2 ஆயிரம் லிட்டர் ரே‌ஷன் மண்எண்ணெய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த மண்எண்ணெய் கேரளாவுக்கு கடத்தி செல்ல முயன்றது தெரிய வந்தது. இதையடுத்து அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்து மண்எண்ணெய்யை இனயம் அரசு குடோனிலும், வாகனத்தை கல்குளம் தாலுகா அலுவலகத்திலும் ஒப்படைத்தனர். அத்துடன், தப்பி ஓடிய டிரைவரை தேடி வருகிறார்கள்.

Next Story