ரூ.5 லட்சம் மானியத்தில் வேளாண் எந்திரங்கள் சப்-கலெக்டர் வழங்கினார்
கூட்டு பண்ணை குழுக்களுக்கு ரூ.5 லட்சம் மானியத்தில் வேளாண் எந்திரங்களை சப்-கலெக்டர் வழங்கினார்.
திண்டிவனம்,
வேளாண்துறை சார்பில் விவசாயிகள் நல்வாழ்வு பணிமனை கூட்டம் திண்டிவனத்தில் நடைபெற்றது. இதற்கு திண்டிவனம் சப்-கலெக்டர் மெர்சி ரம்யா தலைமை தாங்கினார். வேளாண்மை உதவி இயக்குனர் கென்னடி ஜெபக்குமார், வேளாண்மை துணை இயக்குனர் தேவநாதன், வேளாண் உதவி செயற்பொறியாளர் பாஸ்கர், உதவி பேராசிரியர் சத்யா ஆகியோர் முன்னிலை வகித்தார். வட்டார தொழில்நுட்ப மேலாளர் செந்தில்குமார் வரவேற்றார்.
கூட்டத்தில் சப்-கலெக்டர் மெர்சிரம்யா பேசுகையில், விழுப்புரம் மாவட்டத்தில் பிரதான தொழிலாக விவசாயம் விளங்கி வருகிறது. மாறி வரும் பருவ சூழ்நிலைகள், குறைந்து வரும் நீர் ஆதாரங்கள், மாறி வரும் மண்ணின் தன்மை, தொழிலாளர் பற்றாக்குறை போன்ற பல்வேறு சவால்களை விவசாயம் சந்தித்தாலும், விவசாயிகள் நவீன தொழில்நுட்பங்களின் அடிப்படையில் கடின உழைப்பு மற்றும் அரசு திட்டங்களை பயன்படுத்தி வெற்றி பெறுவதை இதுபோன்ற பணிமனைகள் விவசாயிகளுக்கு நம்பிக்கை அளிக்கிறது என்றார்.
தொடர்ந்து வேளாண்மை உதவி இயக்குனர் கென்னடி ஜெபக்குமார் பேசுகையில், தமிழக அரசு மானாவாரி விவசாயிகளுக்கு நீடித்த நிலையான மானாவாரி வேளாண் இயக்கத்தின் மூலம் நீர் சேமிப்பு, கோடை உழவு மற்றும் இடுபொருட்களுக்கு தொடர்ந்து 4 ஆண்டுகள் 50 சதவீதம் மானியம் அளிக்கிறது. மானாவாரி விவசாயிகள் இந்த திட்டத்தில் பயன்பெற புகைப்படம், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை உதவி வேளாண்மை அலுவலகத்தில் அளிக்கவேண்டும். வருகிற 2,022-ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனை பயன்படுத்தி விவசாயிகள் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்றார். முன்னதாக திண்டிவனம்-ஒலக்கூர் பகுதி கூட்டு பண்ணை குழுக்களுக்கு ரூ.5 லட்சம் மானியத்தில் வேளாண் எந்திரங்களை சப்-கலெக்டர் மெர்சி ரம்யா வழங்கினார். இதில் வேளாண் அலுவலர்கள் எத்திராஜ், ஜானகிராமன், ரவிச்சந்திரன், சுமதி மற்றும் 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story