கூட்டுறவு சங்க தேர்தலை முறையாக நடத்தக்கோரி தி.மு.க.வினர் போராட்டம்


கூட்டுறவு சங்க தேர்தலை முறையாக நடத்தக்கோரி  தி.மு.க.வினர் போராட்டம்
x
தினத்தந்தி 4 May 2018 5:15 AM IST (Updated: 3 May 2018 11:54 PM IST)
t-max-icont-min-icon

கூட்டுறவு சங்க தேர்தலை முறையாக நடத்தக்கோரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தி.மு.க.வினர் போராட்டம் நடத்தினர்.

விழுப்புரம், 

தமிழகம் முழுவதும் கூட்டுறவு சங்க தேர்தலில் நடைபெறும் முறைகேடுகளை கண்டித்தும், தேர்தலை நியாயமாகவும், முறையாகவும் நடத்த வலியுறுத்தி தி.மு.க.வினர் பல்வேறுகட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று காலை விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் பொன்முடி எம்.எல்.ஏ. தலைமையில் கட்சி நிர்வாகிகள் திரண்டு வந்தனர்.

இவர்கள் அனைவரும் திடீரென கலெக்டர் அலுவலக நுழைவுவாயிலை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கூட்டுறவு சங்க தேர்தலில் நடைபெற்று வரும் முறைகேடுகளை கண்டித்தும், தேர்தலை முறையாக நடத்தக்கோரியும் அவர்கள் கோஷம் எழுப்பினர். இந்த போராட்டத்தில் ராதாமணி எம்.எல்.ஏ., மாவட்ட பொருளாளர் புகழேந்தி, முன்னாள் எம்.எல்.ஏ. புஷ்பராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் ஜனகராஜ், மாவட்ட துணை செயலாளர்கள் ஜெயச்சந்திரன், மைதிலி ராஜேந்திரன், விழுப்புரம் நகர செயலாளர் சக்கரை, துணை செயலாளர் புருஷோத்தமன், ஒன்றிய செயலாளர்கள் தெய்வசிகாமணி, மும்மூர்த்தி, கல்பட்டு ராஜா, வேம்பி ரவி, பொதுக்குழு உறுப்பினர் பஞ்சநாதன், பொறியாளர் அணி துணை அமைப்பாளர் இளங்கோ, வக்கீல் சுவை.சுரேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜன் மற்றும் போலீசார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க.வினரிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் அவர்கள் போராட்டத்தை கைவிடவில்லை.

உடனே மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா, விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதற்கு அவர்கள் மாவட்ட கலெக்டர் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தினால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என்று கூறி போராட்டத்தை தொடர்ந்தனர்.

இதனை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, கூட்டுறவு சங்க தேர்தலை முறையாக நடத்த வேண்டும் என்று கூறி அவரிடம் பொன்முடி எம்.எல்.ஏ. மனு கொடுத்தார். மனுவை பெற்ற கலெக்டர், உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதையடுத்து தி.மு.க.வினர் அனைவரும் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர். அதன் பிறகு பொன்முடி எம்.எல்.ஏ., நிருபர்களிடம் கூறியதாவது:-

அமைச்சர் சி.வி.சண்முகம் எந்தளவிற்கு அநாகரீகமாக நடந்து கொள்கிறார் என்று நான் சொல்ல வேண்டிய அவசியமில்லை. மேடையிலே பேசி அநாகரீகத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் என்று நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். அதே உணர்வோடு அவரே ஒரு பட்டியலை கொடுத்து இந்த பட்டியலில் உள்ளவர்கள்தான் கூட்டுறவு தேர்தலில் வெற்றி பெற்றார்கள் என்று அறிவிக்க வேண்டும் என அறிவித்ததன் அடிப்படையில் அதிகாரிகளும் அதற்கு அடிபணிந்து செயல்பட்டு கொண்டிருக்கிறார்கள். சி.வி.சண்முகம் இதுபோன்ற அராஜக போக்கை நிறுத்திக்கொள்ள வேண்டும்.கூட்டுறவு சங்க தேர்தலை முறையாக நடத்தும்படி மாவட்ட கலெக்டரை சந்தித்து மனு கொடுத்திருக்கிறோம். அவர், தேர்தலை முறையாக நடத்துவோம் என்று வாக்குறுதி அளித்துள்ளார். முறையாக நடக்கும் என்று நம்புகிறோம். எல்லா இடங்களிலும் முறையாக தேர்தல் நடத்தும் வரை எங்களின் இந்த போராட்டம் தொடரும்.

இவ்வாறு அவர் கூறினார். இந்த திடீர் போராட்டத்தினால் கலெக்டர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story