முறையாக குடிநீர் வினியோகம் செய்யக்கோரி கிராம மக்கள் போராட்டம்


முறையாக குடிநீர் வினியோகம் செய்யக்கோரி  கிராம மக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 3 May 2018 10:15 PM GMT (Updated: 3 May 2018 6:39 PM GMT)

விருத்தாசலம் அருகே முறையாக குடிநீர் வினியோகம் செய்யக்கோரி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி முன்பு கிராம மக்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

விருத்தாசலம்,

கோடை காலம் தொடங்கியதையொட்டி விருத்தாசலம் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக காலி குடங்களுடன் கிராம மக்கள் கடந்த ஒரு வாரமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருவது தொடர் கதையாகி விட்டது. இந்த நிலையில் ஆழ்துளை கிணற்றில் இருக்கும் தண்ணீரை தனிநபர்கள் சிலர் தங்களது வீடுகளின் தோட்டங்களுக்கு பயன்படுத்துவதால் குடிநீர் தட்டுப்பாட்டு ஏற்பட்டுள்ளதாக கூறி கிராம மக்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் விவரம் வருமாறு:-

விருத்தாசலம் அருகே உள்ளது ஏ.வல்லியம் கிராமம். இங்குள்ள மக்களின் குடிநீர் வசதிக்காக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு, அதன் அருகே ஆழ்துளை கிணறு உள்ளது. இந்த ஆழ்துளை கிணற்றில் இருந்து மின்மோட்டார் மூலம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் தண்ணீர் ஏற்றி, கிராம மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ஆழ்துளை கிணற்றில் இருந்து தனி நபர்கள் சிலர் குழாய் மூலம் தங்களது வீடுகளின் தோட்டங்களுக்கு தண்ணீர் பாய்ச்சி வருவதாக தெரிகிறது. இதன் மூலம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் முழுவதுமாக தண்ணீர் நிரப்பமுடியவில்லை. இதன்காரணமாக குடிநீர் வினியோகம் முறையாக இல்லை.

மேலும், அந்த கிராமத்தில் உள்ள 4 மினிகுடிநீர் தொட்டிகளுக்கு தண்ணீர் ஏற்றுவதற்காக மின்மோட்டாருக்கு மும்முனை மின்சாரம் வழங்கப்படவில்லை என தெரிகிறது. இதன் காரணமாக 4 மினிகுடிநீர் தொட்டிகளில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் குடிநீருக்காக கிராம மக்கள் பக்கத்து கிராமங்கள் மற்றும் விவசாய நிலங்களுக்கு காலிகுடங்களுடன் அலைந்து திரிவதை காணமுடிகிறது.

இது பற்றி கிராம மக்கள் சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை தகவல் தெரிவித்தும் இதுவரை பயன்இல்லை. இந்த நிலையில் நேற்று கிராம மக்கள் ஒன்று திரண்டு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி முன்பு நின்று காலிகுடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, தட்டுப்பாடு இன்றி குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும், மினிகுடிநீர் தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும், முறைகேடாக ஆழ்துளை கிணற்றில் இருந்து தண்ணீர் பிடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். சிறிது நேர போராட்டத்திற்கு பிறகு, குடிநீர் பிரச்சினையை ஓரிரு நாட்களுக்குள் தீர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காவிட்டால் விருத்தாசலம்-ஜெயங்கொண்டம் சாலையில் மறியல் போராட்டம் நடத்துவதாக அறிவித்துவிட்டு கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story