தேனியில், ரூ.1 கோடி மோசடி ; வங்கியை வாடிக்கையாளர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு


தேனியில், ரூ.1 கோடி மோசடி ; வங்கியை வாடிக்கையாளர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 4 May 2018 4:45 AM IST (Updated: 4 May 2018 12:44 AM IST)
t-max-icont-min-icon

தேனி கனரா வங்கியில் ரூ.1 கோடி மோசடி நடந்ததை தொடர்ந்து, அந்த வங்கியை வாடிக்கையாளர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் வங்கியில் பாதுகாப்பு பணிக்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

தேனி,

தேனி-மதுரை சாலையில் உள்ள கனரா வங்கி கிளையில் நகைகள் அடகு வைத்ததில் சுமார் ரூ.1 கோடி அளவில் மோசடி நடந்துள்ளது தெரியவந்தது. அதில் நகைகளை கையாடல் செய்தல், வாடிக்கையாளர்கள் பெயரில் போலி நகைகளை அடகு வைத்தல் போன்ற மோசடி சம்பவங்கள் நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து வங்கியின் முதன்மை மேலாளர் சுப்பையா தலைமையில், வங்கி அதிகாரிகள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனை சந்தித்து புகார் செய்தனர். அதில் ‘வங்கியின் நகை மதிப்பீட்டாளர் செந்தில், அவருடைய உதவியாளர் வினோத் ஆகிய 2 பேரும் சேர்ந்து, வங்கியில் பொதுமக்கள் அடகு வைத்த நகைகளின் கடன் தொகையை மாற்றி பூர்த்தி செய்தும், போலி நகைகளை வாடிக்கையாளர்களின் பெயரில் அடகு வைத்தும் ரூ.98 லட்சத்து 12 ஆயிரம் மோசடி செய்துள்ளனர்’ என்று கூறியிருந்தனர்.

அதன்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பரிமளாதேவி தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினர்.

மோசடி தொடர்பாக நகை மதிப்பீட்டாளரான தேனி பங்களாமேடு 2-வது தெருவை சேர்ந்த செந்தில் (வயது 40), உதவியாளரான தேனியை சேர்ந்த வினோத் ஆகிய 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தலைமறைவான செந்தில், வினோத் ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

வங்கியில் ரூ.1 கோடி அளவில் மோசடி நடந்து இருப்பதை கேள்விபட்ட நகைகளை அடகு வைத்த வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். நேற்று காலையில் வாடிக்கையாளர்கள் வங்கிக்கு திரண்டு வந்து தாங்கள் அடகு வைத்த நகைகளை சரி பார்க்கவேண்டும் என்று அதிகாரிகளை முற்றுகையிட்டனர். இதனால் வங்கியில் வாடிக்கையாளர்கள் கூட்டம் அதிகரித்தது. வங்கியில் அன்றாட பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. உடனே தேனி போலீஸ் நிலையத்துக்கு வங்கி அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

இதை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணிக்கு தேனி போலீசார் குவிக்கப்பட்டனர். பின்னர் போலீசார் வாடிக்கையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின்பு கூட்டத்தை போலீசார் ஒழுங்குபடுத்தினர். இதையடுத்து வங்கி அதிகாரிகள் மோசடி நடந்ததாக கூறப்பட்ட நகைகளின் வாடிக்கையாளர்கள் பெயர் பட்டியலை காண்பித்தனர். அதில் சிலர் அடகு வைத்த நகைகளுக்கு கூடுதல் தொகை பெறப்பட்டு இருப்பது தெரியவந்தது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து அடகு வைத்த நகைகளை சிலர் திருப்ப முயன்றனர். அதில் தேனியை சேர்ந்த பிரகாஷ் என்பவர் அடகு வைத்த 75 பவுன் நகைகளை ரூ.5 லட்சம் செலுத்தி திருப்பினார். அந்த நகைகளின் எடை குறைவாக இருப்பது தெரியவந்தது. உடனே அவர் வங்கி அதிகாரிகளிடம் முறையிட்டார். அப்போது மோசடி தொடர்பாக போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தரப்பில் கூறினர். இதை அவர் ஏற்று கொள்ளவில்லை. பின்னர் அவர் போலீசில் புகார் கொடுக்க சென்றார். வங்கியில் தொடர்ந்து வாடிக்கையாளர்களின் வருகை அதிகமாக இருந்தது. மேலும் பலர் நகைகளின் எடை குறைந்து இருப்பதற்கு விளக்கம் கேட்டு அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கிடையே வங்கிக்கு மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நேற்று சென்று விசாரணை நடத்தினர். அப்போது மோசடி தொடர்பான ஆவணங்களை அவர்கள் பார்வையிட்டனர். அப்போது நகை எடை குறைவாக உள்ள வாடிக்கையாளர்களுக்கு இன்னும் 2 மாதத்துக்குள் நகைகளை திருப்பி ஒப்படைக்கப்படும் என்று வங்கி அதிகாரிகள் போலீசில் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
1 More update

Next Story