செம்பட்டி அருகே கல்லூரி மாணவி காரில் கடத்தல்
செம்பட்டி அருகே கல்லூரி மாணவி காரில் கடத்தப்பட்டார். இந்த வழக்கில் போலீசார் அலட்சியம் காட்டுவதாகவும், மாணவியை கண்டுபிடித்து மீட்டு தரக்கோரியும் பொதுமக்கள் செம்பட்டி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு கோஷமிட்டனர்.
செம்பட்டி
செம்பட்டி அருகே உள்ள ஜெ.புதுக்கோட்டையை சேர்ந்த 22 வயது மாணவி, ரெட்டியார்சத்திரம் செம்மடைப்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில், எம்.எஸ்சி.ஐ.டி. இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் கல்லூரி பஸ்சுக் காக, ஜெ.புதுக்கோட்டை பஸ் நிறுத்தத்தில் அந்த மாணவி காத்திருந்தார்.
அப்போது, சின்னாளபட்டியில் இருந்து அதிவேகமாக வந்த சிவப்பு நிற கார், மாணவி முன்பு நின்றது. அதில் இருந்து மளமளவென இறங்கிய மர்ம நபர்கள் 3 பேர், மாணவியை காரில் ஏறுமாறு அழைத்தனர். இதற்கு மாணவி மறுத்த நிலையில், 3 பேரும் அவரை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றிக்கொண்டு, செம்பட்டியை நோக்கி சென்றனர்.
இதுகுறித்து அக்கம்பக்கத்தினர், மாணவியின் பெற்றோரிடம் தகவல் தெரிவித்தனர். அவர்கள் மாணவியை பல இடங்களில் தேடியும் கிடைக் காததால், செம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். இந்தநிலையில் மாணவியை கண்டுபிடித்து மீட்டு தரவேண்டும் என்றும், வழக்கு விசாரணையில் போலீசார் அலட்சியம் காட்டுவதாகவும் கூறி நேற்று கிராம மக்கள் சுமார் 200 பேர், செம்பட்டி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு கோஷமிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
இதைத்தொடர்ந்து ஒட்டன்சத்திரம் துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரன், செம்பட்டி இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி விரைந்து நடவடிக்கை எடுத்து, மாணவியை மீட்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து முற்றுகை போராட்டத்தை பொதுமக்கள் கைவிட்டு கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story