தோல் தொழிற்சாலையில் பெண் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்
திண்டுக்கல் தோல் பதனிடும் தொழிற்சாலையில் பணியாற்றும் பெண் தொழிலாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல்
திண்டுக்கல் நகரில் 42 தோல் பதனிடும் தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த தொழிற்சாலைகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இதில் சுமார் 500 பேர் பெண் தொழிலாளர்கள் ஆவர். இந்த பெண் தொழிலாளர்கள் ஆண்களுக்கு இணையாக சம்பளம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் தொழிற்சாலைகளில் பெண்களுக்கு உதவியாளர் பணி வழங்க வேண்டும். இ.எஸ்.ஐ., பி.எப். பிடித்தம் செய்ய வேண்டும். பெண் தொழிலாளர்களுக்கு வாரவிடுமுறை மற்றும் பண்டிகை விடுமுறை வழங்குவதோடு சம்பளத்துடன் மருத்துவ விடுப்பு வழங்க வேண்டும். பெண் தொழிலாளர்களுக்கு சீருடை மற்றும் தனியாக கழிப்பறை, ஓய்வறை வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று பெண் தொழிலாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் திண்டுக்கல் பேகம்பூரில் உள்ள தோல் வர்த்தகர் சங்கம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் கே.ஆர்.கணேசன் தலைமை தாங்கினார். தோல் பதனிடும் தொழிலாளர்கள் சங்கத்தின் செயலாளர் ஜெயசீலன் முன்னிலை வகித்தார்.
அப்போது பெண் தொழிலாளர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி கோஷமிட்டனர். இதில் பொருளாளர் தவக்குமார், நிர்வாகிகள் சித்ரா, கண்ணன், ஜோசி மற்றும் ஏராளமான பெண் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
இதுபற்றி மேலும் சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் கே.ஆர்.கணேசன் கூறுகையில், பேச்சுவார்த்தையில் ஒப்புக்கொண்ட கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி பெண் தொழிலாளர்கள் மட்டும் ஒருநாள் வேலைநிறுத்தம் செய்துள்ளனர். கோரிக்கைளை நிறைவேற்றவில்லை என்றால் அனைத்து தொழிலாளர்களும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவார்கள், என்றார்.
Related Tags :
Next Story