செல்போன் வாங்கித்தராததால் பள்ளி மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை


செல்போன் வாங்கித்தராததால் பள்ளி மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 4 May 2018 4:00 AM IST (Updated: 4 May 2018 1:38 AM IST)
t-max-icont-min-icon

பல்லடம் அருகே செல்போன் வாங்கித்தராததால் மனமுடைந்த பள்ளி மாணவன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டான்.

பல்லடம்

சீர்காழியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 45). இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள பனப்பாளையம் திருச்சி ரோட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவருடைய மனைவி கிருஷ்ணவேனி (38). இவர்களுக்கு வசந்த் (17), பிரேம்நாத் (14) ஆகிய 2 மகன்கள் இருந்தனர்.

ரவிச்சந்திரன் அந்த பகுதியில் உள்ள ஒரு டையிங் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். வசந்த் ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள ஒரு கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். பிரேம்நாத் பல்லடத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான்.

இந்த நிலையில் மாணவன் பிரேம்நாத் தனது தந்தையிடம் அடிக்கடி செல்போன் வேண்டும் என்று கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளான். ரவிச்சந்திரனும் வாங்கித்தருவதாக கூறி காலம் கடத்தி வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று பிரேம்நாத் தான் 8-ம் வகுப்பு முடித்து 9-ம் வகுப்பு செல்கிறேன். எனக்கு ஏன் இன்னும் செல்போன் வாங்கித்தரவில்லை என்று கேட்டு அடம்பிடித்துள்ளான்.

இதற்கிடையில் தந்தை செல்போன் வாங்கித்தராததால் மனமுடைந்த மாணவன் காலை 9 மணி அளவில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சமையலறையில் விட்டத்தில் நைலான் கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான். அப்போது வீட்டிற்கு வந்த ரவிச்சந்திரனின் உறவினரான லோகேஷ் என்பவர் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து ரவிச்சந்திரனுக்கு அவர் தகவல் தெரிவித்தார். உடனே அங்கு வந்த ரவிச்சந்திரன், பிரேம்நாத் உடலை பார்த்து கதறி அழுதனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் பல்லடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தந்தை செல்போன் வாங்கித்தராததால் மனமுடைந்த பள்ளி மாணவன் தூக்குப்போட்டு தற்கொலைசெய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story