தமிழகத்திற்கு காவிரி தண்ணீரை பெற்றுத்தர அ.தி.மு.க. அரசால் மட்டுமே முடியும் அமைச்சர் பேச்சு


தமிழகத்திற்கு காவிரி தண்ணீரை பெற்றுத்தர அ.தி.மு.க. அரசால் மட்டுமே முடியும் அமைச்சர் பேச்சு
x
தினத்தந்தி 4 May 2018 4:15 AM IST (Updated: 4 May 2018 2:47 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்திற்கு காவிரி தண்ணீரை பெற்றுத்தர அ.தி.மு.க. அரசால் மட்டுமே முடியும் என்று பரமத்திவேலூர் அருகே நடந்த மே தின பொதுக்கூட்டத்தில் அமைச்சர் தங்கமணி பேசினார்.

பரமத்தி வேலூர்,

பரமத்தி வேலூர் அண்ணாசிலை அருகே அண்ணா தொழிற்சங்கப் பேரவை சார்பில் மே தின விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் ராமலிங்கம் தலைமை தாங்கினார். பரமத்தி வேலூர் பேரூராட்சி முன்னாள் தலைவர் வேலுசாமி வரவேற்று பேசினார். மாவட்ட வக்கீல் பிரிவு தலைவர் தனசேகரன், கபிலர்மலை முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் ராஜேந்திரன், சேலம் ஆவின் முன்னாள் தலைவர் சின்னுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி, சமூக நலம் மற்றும் சத்துணவுத்துறை அமைச்சர் டாக்டர் சரோஜா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். அப்போது அமைச்சர் தங்கமணி பேசியதாவது:-

தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது கூட்டணியாக இருந்த காங்கிரஸ் காவிரி மேலாண்மை வாரியம் குறித்து எவ்வித நடவடிகையும் எடுக்காமல் தற்போது வீண் பிரசாரம் செய்து வருவது மக்களை ஏமாற்றும் முயற்சியாகும். மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆட்சியின் போது வெளியில் வராத தினகரன், ஜெயலலிதா அவருடைய மறைவுக்கு பிறகு அ.தி.மு.க.வை கைப்பற்றும் முயற்சியில் தோல்வியடைந்ததை ஒப்புக்கொள்ளாமல் ஆட்சி மீது குறை கூறி வருகிறார்.

கல்விப்புரட்சி

அதேபோல, திவாகரன் தனி அமைப்பினை உருவாக்கியதன் பின்னணியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இருப்பதாக தம்பட்டம் அடிக்கிறார். ஆனால் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூறியதைப்போல் இன்னும் நூறாண்டுகள் அ.தி.மு.க., ஆட்சி நிலைத்து நிற்கும். நிதிநிலை மோசமாக இருந்தாலும், பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை இந்த அரசு வழங்கி வருகிறது.

இந்தியாவே, திரும்பி பார்க்கும் அளவிற்கு தமிழகத்தில் கல்விப்புரட்சி, மின்வெட்டு இல்லாத ஆட்சியும் நடத்தி வருகிறோம். தமிழகத்திற்கு காவிரி தண்ணீரை பெற்றுத்தர அ.தி.மு.க. அரசால் மட்டுமே முடியும்.

இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் அமைப்பு செயலாளர் ராஜூ, சட்ட மன்ற உறுப்பினர்கள் பாஸ்கர், சந்திரசேகரன், பொன்.சரஸ்வதி, ஒன்றிய செயலாளர் சுகுமார், அண்ணா தொழிற்சங்க பேரவையின் மாவட்ட துணைச் செயலாளர் நாகராஜன் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், சார்பு அமைப்பு பொறுப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
1 More update

Next Story