அதிகாரியை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த வந்த அங்கன்வாடி ஊழியர்களுடன் கலெக்டர் பேச்சுவார்த்தை


அதிகாரியை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த வந்த அங்கன்வாடி ஊழியர்களுடன் கலெக்டர் பேச்சுவார்த்தை
x
தினத்தந்தி 4 May 2018 4:30 AM IST (Updated: 4 May 2018 2:48 AM IST)
t-max-icont-min-icon

கரூரில் அதிகாரியின் விரோத போக்கை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த வந்த அங்கன்வாடி ஊழியர்களுடன் கலெக்டர் பேச்சுவார்த்தை நடத்தினார்.

கரூர்,

கரூர் மாவட்ட அங்கன்வாடி ஊழியர்களிடையே விரோத போக்கினை கடைபிடிக்கும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் மாவட்ட அதிகாரியை கண்டித்து கலெக்டர் அலுவலகம் முன்பு 3-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக கரூர் மாவட்ட அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தினர் அறிவித்திருந்தனர். அதன்பேரில் நேற்று மாலை அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர் அந்த சங்கத்தினர், நிர்வாகிகள் மாவட்ட கலெக்டர் அன்பழகனை சந்தித்து ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட மாவட்ட அதிகாரி மீதான குற்ற சாட்டினை முன்வைத்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். அப்போது அங்கன்வாடி ஊழியர்கள் முன்னிலையில் அந்த அதிகாரி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என எடுத்து கூறினர். இந்த பேச்சுவார்த்தையின் போது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் பதில் கூறினார்.

ஆர்ப்பாட்டம்

பின்னர் கலெக்டர் அலுவலக வளாகத்திலுள்ள காத்திருப்போர் அறையில் கூடி நின்று அங்கன்வாடி ஊழியர்கள் ஆலோசனை கூட்டம் நடத்தினர். பின்னர் ஒருங்கிணைந்த குழந்தைகள் திட்ட மாவட்ட அதிகாரியின் அலுவலகத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து கலெக்டர் அலுவலகம் முன்பு நின்று, அங்கன்வாடி ஊழியர்கள் மீது எவ்வித ஆதாரமுமின்றி பிறப்பிக்கப்பட்ட பணியிடை நீக்க உத்தரவினை திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் மாவட்ட தலைவர் பத்மாவதி, மாவட்ட செயலாளர் சாந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story