மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல் போராட்டம் 19 பேர் கைது


மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல் போராட்டம் 19 பேர் கைது
x
தினத்தந்தி 4 May 2018 4:30 AM IST (Updated: 4 May 2018 2:50 AM IST)
t-max-icont-min-icon

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து திருச்சியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள். 19 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி,

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மற்றும் காவிரி நீர் பங்கீடு தொடர்பான வழக்கில் மேலும், மேலும் கால அவகாசம் கேட்கும் மத்திய அரசை கண்டித்தும், கோர்ட்டு உத்தரவின்படி கர்நாடக மாநில அரசு தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க கோரியும் நேற்று திருச்சி மத்திய பஸ் நிலையம் பெரியார் சிலை அருகில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் திடீர் என சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள்.

அப்போது அவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினார்கள். இதனால் சிறிது நேரம் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் கண்டோன்மெண்ட் போலீசார் அங்கு வந்து சாலை மறியல் செய்த இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர்கள் இந்திரஜித், திராவிடமணி, முன்னாள் மாவட்ட செயலாளர் சுரேஷ், விவசாய சங்க தலைவர் அயிலை சிவசூரியன் உள்பட 19 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டு இருந்தனர். மாலை 6 மணி அளவில் அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். 

Next Story