பிளஸ்-2 மாணவி உருவாக்கிய செயற்கைகோள் மெக்சிகோவில் இருந்து நாளை மறுநாள் விண்ணில் ஏவப்படுகிறது


பிளஸ்-2 மாணவி உருவாக்கிய செயற்கைகோள் மெக்சிகோவில் இருந்து நாளை மறுநாள் விண்ணில் ஏவப்படுகிறது
x
தினத்தந்தி 4 May 2018 4:45 AM IST (Updated: 4 May 2018 2:50 AM IST)
t-max-icont-min-icon

திருவெறும்பூரை சேர்ந்த பிளஸ்-2 மாணவி செயற்கைகோள் ஒன்றை உருவாக்கி உள்ளார். அந்த செயற்கைகோள் மெக்சிகோவில் இருந்து நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) விண்ணில் ஏவப்படுகிறது.

திருச்சி,

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள குமரேசபுரத்தை சேர்ந்த ஆல்பர்ட் சி.எஸ்.குமார்-சசிகலா தம்பதியின் மகள் வில்லட் ஓவியா. இவர், பாய்லர் ஆலை வளாகத்தில் உள்ள ஆர்.எஸ்.கே. மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து பொதுத்தேர்வை எழுதி முடித்துள்ளார். இவர் விண்வெளியில் வளி மண்டலத்தில் கலந்துள்ள மாசு மற்றும் வெப்பமயமாதல் குறித்து ஆய்வு மேற்கொண்டு, குறைந்த எடை கொண்ட செயற்கைகோள் ஒன்றை உருவாக்கியுள்ளார்.

அந்த செயற்கைகோளுக்கு, ‘நீட்’ தேர்வால் உயிரை மாய்த்துக்கொண்ட அரியலூர் மாணவி அனிதாவின் நினைவாக, ‘அனிதா’என்ற பெயரை வில்லட் ஓவியா சூட்டியுள்ளார். இந்த செயற்கைகோள் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) மெக்சிகோவில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி தளத்தில் இருந்து விண்ணில் ஏவப்படுகிறது. செயற்கைகோள் குறித்து மாணவி வில்லட் ஓவியா கூறியதாவது:-

நான் (வில்லட் ஓவியா) பள்ளியில் 7-ம் வகுப்பு படிக்கும் போது அறிவியல் கண்காட்சி போட்டியில் பங்கேற்றேன். அதில் இருந்து எனக்கு அறிவியல் கண்டுபிடிப்புகளின் மீது ஆர்வம் வந்தது. 9-ம் வகுப்பு படிக்கும் போது சென்னையில் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று நடத்திய அறிவியல் கண்டுபிடிப்பு போட்டியில் பங்கேற்றேன். இதில் ஒவ்வொரு சுற்று வாரியாக பல்வேறு தலைப்புகளில் கண்டுபிடிப்புகளை உருவாக்கி வெற்றி பெற்றேன்.

நான் 10-ம் வகுப்பு படிக்கும் போது முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமை சென்னையில் சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. அப்போது எனது கண்டுபிடிப்புகளில் ஒன்றை அவருக்கு பரிசாக கொடுத்தேன். அவர் என்னை பாராட்டி ஊக்கப்படுத்தினார். அதன்பிறகு அறிவியல் கண்டுபிடிப்புகள் மீது எனக்கு ஆர்வம் அதிகரித்தது. ஒரு செயற்கைகோள் உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. அதிலும் குறைந்த எடையில் தயாரிக்க திட்டமிட்டேன்.

எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக் தொழில்நுட்பத்தை கற்றுக்கொண்டு சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரி நிர்வாகத்தின் உதவி மூலம் 500 கிராம் எடை கொண்ட செயற்கைகோளை உருவாக்கினேன். இந்த செயற்கைகோள் வளி மண்டலத்தில் காற்று மாசு மற்றும் வெப்பமயமாதல் குறித்து ஆய்வு செய்து அனுப்பும். அதன் அடிப்படையில் பூமியில் காற்று மாசு மற்றும் வெப்பமயமாதலை தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம்.

இந்த செயற்கைகோள் மெக்சிகோவில் இருந்து நாளை மறுநாள் ஏவப்படுகிறது. அதில் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. அந்த கேமரா மூலம் செயற்கைகோள் பயணிக்கும் காட்சி பதிவாகும்.எனது பெற்றோர் எனக்கு மிகவும் ஊக்கமாகவும், துணையாகவும் இருந்து வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

மாணவியின் தாய் சசிகலா கூறுகையில், “எனது மகள் (வில்லட் ஓவியா) சிறுவயதில் இருந்தே ஆராய்ச்சியில் மிகவும் ஆர்வம் கொண்டவள். அவளுக்கு தேவையான உதவிகளை செய்தோம். அறிவியல் போட்டிகளில் பங்கேற்க அழைத்து செல்வது உண்டு. பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வாங்கி உள்ளார். மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளார். செயற்கைகோளை தனியார் கல்லூரி நிர்வாகத்தினர் மெக்சிகோவிற்கு அனுப்பி வைத்துள்ளனர்” என்றார்.

இளம் வயதில் இத்தகைய சாதனை புரிந்திருக்கும் மாணவி வில்லட் ஓவியாவை திருவெறும்பூர் தொகுதி எம்.எல்.ஏ. அன்பில்மகேஷ் பொய்யாமொழி பாராட்டினார். அப்போது மாணவியின் பெற்றோர் உடன் இருந்தனர். 

Next Story