காட்டு யானை தாக்கி வாலிபர் பலி; கூடலூர்- கேரளா சாலையில் கிராம மக்கள் மறியல் ஒன்றரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு


காட்டு யானை தாக்கி வாலிபர் பலி; கூடலூர்- கேரளா சாலையில் கிராம மக்கள் மறியல் ஒன்றரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 4 May 2018 4:45 AM IST (Updated: 4 May 2018 3:00 AM IST)
t-max-icont-min-icon

கூடலூர்- கேரளா சாலையில் கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டதால் ஒன்றரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கூடலூர்,

கூடலூர் அருகே காட்டு யானை தாக்கி வாலிபர் பலியானதை கண்டித்தும், காட்டு யானைகளிடம் இருந்து பாதுகாக்க கோரியும் கூடலூர் அருகே கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் ஒன்றரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கூடலூர் தாலுகா தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட பாடந்தொரை அருகே உள்ள கர்க்கப்பாலி வட்டக்கொல்லி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன். இவரது மகன் ரமேஷ் (வயது 29). இவர் நேற்று முன்தினம் இரவு தனது நண்பர்கள் ஜெயபிரகாஷ் (32), சிவபிரகாஷ் (25) ஆகியோருடன் அதே பகுதியில் நடந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு வீட்டுக்கு திரும்பி சென்று கொண்டு இருந்தார்.

அப்போது அதே பகுதியில் மறைந்திருந்த காட்டு யானை ஒன்று திடீரென ரமேஷ் மற்றும் அவரது நண்பர்களை துரத்தியது. மேலும் ரமேஷ் மற்றும் அவரது நண்பர்கள் ஜெயபிரகாஷ், சிவபிரகாஷ் ஆகியோரை தாக்கியது. இதில் ஜெய பிரகாஷ், சிவபிரகாஷ் பலத்த காயங்களுடன் காட்டு யானையிடம் இருந்து உயிர் தப்பினர். ஆனால் ரமேஷ் காட்டு யானையின் தாக்குதலுக்கு ஆளாகினார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்த தேவர்சோலை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ரமேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கூடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். மேலும் காட்டு யானையின் தாக்குதலுக்கு ஆளான ஜெயபிரகாஷ், சிவபிரகாஷ் ஆகியோர் கூடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். யானை தாக்கி வாலிபர் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் காட்டு யானைகள் ஊருக்குள் வருவதை கட்டுப்படுத்த வேண்டும். அகழி அல்லது மின்வேலி அமைத்து பொதுமக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கர்க்கப்பாலி பகுதி கிராம மக்கள் நேற்று காலை 9 மணிக்கு கூடலூர்- கேரள மாநிலம் சுல்தான்பத்தேரி செல்லும் சாலையில் உள்ள பாடந்தொரையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவல் அறிந்த கூடலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு ரவிசங்கர், இன்ஸ்பெக்டர்கள் வெங்கடாசலம், சிவசங்கரன் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மாவட்ட கலெக்டர், வன அலுவலர் நேரில் வந்து விளக்கம் அளிக்க வேண்டும். காட்டு யானைகளிடம் இருந்து மக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்க வேண்டும். அதன்பின்னரே மறியல் கைவிடப்படும் என தெரிவித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் ஆர்.டி.ஓ. முருகையன், தாசில்தார் ரவிச்சந்திரன் ஆகியோர் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் முடிவு ஏற்பட வில்லை. இதைத்தொடர்ந்து அனைவரும் கலைந்து செல்லுமாறு போலீசார் எச்சரித்தனர். இதனால் காலை 10.30 மணிக்கு மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை போலீசார் அப்புறப்படுத்தினர்.
கூடலூர் எம்.எல்.ஏ. திராவிடமணி மற்றும் தி.மு.க. நிர்வாகி பாண்டியராஜ், விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகி சகாதேவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகி வாசு, தே.மு.தி.க.வை சேர்ந்த திருப்தி மணி உள்பட அரசியல் கட்சியினர் நேரில் வந்து கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, காட்டு யானைகளால் கிராம மக்களுக்கு அச்சுறுத்தல்கள் உள்ளன என பலமுறை வனத்துறைக்கு புகார் தெரிவித்தும் அதனை விரட்டுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கவில்லை. இந்த நிலையில் வாலிபர் ஒருவர் காட்டு யானையிடம் சிக்கி பலியாகி விட்டார். வனத்துறையினர் அலட்சியத்தால் உயிர்களை இழக்க வேண்டிய நிலை உள்ளது என கிராம மக்கள் வனத்துறை மீது பல்வேறு புகார்களை தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து எம்.எல்.ஏ. திராவிடமணி செல்போனில் உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, காட்டு யானைகளை விரட்ட தீவிர நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அகழி வெட்டவும் ஏற்பாடு செய்யப்படும் என அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதை ஏற்று கிராம மக்கள் கலைந்து சென்றனர். தொடர்ந்து பாடந்தொரை பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

Next Story