பழங்குடியின மக்களின் கலாசாரத்தை பாதுகாக்க இயற்கை சுற்றுலா தகவல் மையம் - கலெக்டர் இன்னசென்ட் திவ்யா திறப்பு


பழங்குடியின மக்களின் கலாசாரத்தை பாதுகாக்க இயற்கை சுற்றுலா தகவல் மையம் - கலெக்டர் இன்னசென்ட் திவ்யா திறப்பு
x
தினத்தந்தி 3 May 2018 11:30 PM GMT (Updated: 3 May 2018 9:45 PM GMT)

பழங்குடியின மக்களின் கலாசாரத்தை பாதுகாக்கும் வகையில் கோத்தகிரியில் இயற்கை சுற்றுலா தகவல் மையத்தை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா திறந்து வைத்தார்.

கோத்தகிரி,

கோத்தகிரியில் உள்ள கோடநாடு காட்சி முனை, ஜான் சல்லிவன் நினைவகம், கேத்தரின் நீர்வீழ்ச்சி லாங்வுட் சோலை, நேரு பூங்கா ஆகிய சுற்றுலா தலங்கள் மட்டுமே சுற்றுலா பயணிகளுக்கு தெரிந்த இடங்களாகும். கோத்தகிரி சுற்று வட்டார பகுதிகளில் உள்ள இயற்கை சுற்றுலா தலங்களை மேம்படுத்தவும், சுற்றுலா பயணிகளை கவரும் நோக்கத்துடன் நீலகிரி மாவட்ட நிர்வாகம், நீலகிரி மாவட்ட ஆதிவாசி நலச்சங்கம், ஜான் சல்லிவன் அறக்கட்டளை ஆகியவை இணைந்து இயற்கை சுற்றுலா தகவல் மையம் தொடங்க முடிவு செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து கோத்தகிரி பேரூராட்சிக்கு சொந்தமான பழைய பேரூராட்சி அலுவலக கட்டிடம் இதற்காக தேர்வு செய்யப்பட்டது. இதையடுத்து நீலகிரி மாவட்டத்தின் முதல் கலெக்டர் ஜான் சல்லிவன் பெயரில் இயற்கை சுற்றுலா தகவல் மையம் நேற்று திறக்கப்பட்டது.

இதன் திறப்பு விழாவுக்கு ஆதிவாசிகள் நலச்சங்க தலைவர் டாக்டர் ராஜலட்சுமி தலைமை தாங்கினார். செயலாளர் ஆல்வாஸ் வரவேற்றார். கோத்தகிரி தாசில்தார் தனபாக்கியம், குன்னூர் ஆர்.டி.ஓ. பத்ரிநாத், செயல் அலுவலர் குணசேகரன், வட்டார வளர்ச்சி அலுவலர் கோல்டி சாராள் மதுரை காமராஜர் பல்கலைக்கழக முன்னாள் தலைவர் பிச்சையப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இயற்கை சுற்றுலா தகவல் மையத்தை மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா திறந்து வைத்து பேசியதாவது:-

நீலகிரி மாவட்டத்துக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு ஊட்டி, குன்னூரில் உள்ள சுற்றுலா தலங்களை தவிர வேறு பகுதிகளில் உள்ள சுற்றுலா தலங்கள் தெரிவது இல்லை. நீலகிரி மாவட்டம் முழுவதும் பழமையான கலாசாரம் கொண்ட பழங்குடி கிராமங்கள், வனப்பகுதியில் ஆழகிய சுற்றுலா தலங்கள் ஏராளமாக உள்ளன. எனவே சுற்றுலா தலங்களை மேம்படுத்தவும், பழங்குடியின மக்களின் கலாசாரத்தை வெளி உலகிற்கு தெரியப்படுத்தவும் இயற்கை சுற்றுலா மையம் கோத்தகிரியில் தொடங்கப்பட்டு உள்ளது.

கோத்தகிரி பகுதியில் உள்ள அரிய சுற்றுலா தலங்கள் குறித்து சுற்றுலா பயணிகளுக்கு தெரியப்படுத்த மாணவர்கள், பொதுமக்கள் தங்களின் பங்களிப்பை வழங்குவதுடன், தற்போதுள்ள தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சுற்றுலா தலங்கள் குறித்து அனைவருக்கும் தெரியபடுத்த வேண்டும். இதற்காக தேவைப்படும் உதவிகளை மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்து கொடுக்கப்படும் இவ்வாறு அவர் கூறினார்.

ஜான் சல்லிவன் இயற்கை சுற்றுலா தகவல் மையத்தில் பதிவு செய்பவர்கள் இயற்கை சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். கோத்தகிரி நேரு பூங்கா, கேத்தரின் நீர்வீழ்ச்சி, லாங்வுட் சோலை மட்டுமின்றி குயின்சோலை, டேன்டீ தேயிலை தோட்டம், தேயிலை தொழிற்சாலை, கரிக்கையூர் பாறை ஓவியங்கள், ரங்கசாமி மலை சிகரம், கோழிக்கரை வனப்பகுதி, செம்மனாரை வனப்பகுதி, குஞ்சப்பனை அருகே உள்ள மந்தரை மலை உச்சி காட்சி முனை, பனகுடி வனப்பகுதி, டிரெக்கிங் பாயின்ட், வெள்ளரிகம்பை பாறை ஓவியங்கள், அடர்ந்த வனப்பகுதியில் உள்ள அரிய பறவைகளை காணவும் சுற்றுலா பயணிகள் அழைத்துச் செல்லப்படுகிறார்கள்.

வனப்பகுதிகளுக்குள் பாதுகாப்பான முறையில் டிரக்கிங் அழைத்து செல்லப்படுவதால் இயற்கை மற்றும் சுற்றுச் சூழல் சார்ந்த சுற்றுலா செல்ல சுற்றுலா பயணிகள் இடையே ஆர்வம் அதிகரிக்கும் என இயற்கை சுற்றுலா மைய அலுவலர்கள் தெரிவித்தனர். தற்போது இந்த மையம் தொடங்கப்பட்டு உள்ளதையடுத்து விரைவில் சுற்றுலா பயணிகள் பயன்பெறும் வகையில் சுற்றுலாவுக்கு அழைத்து செல்லப்படுகிறார்கள்.

விழாவில், கன்னேரிமுக்கு ஜான்சல்லிவன் அறக்கட்டளை நிர்வாகிகள், நுகர்வோர் அமைப்புகள், அரசு அதிகாரிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஆதிவாசி நலச்சங்க திட்ட அலுவலர் முத்துசாமி நன்றி கூறினார்.

Next Story