மருத்துவ மாணவர்கள் முயன்றால் போதைப்பொருள் பயன்பாட்டை கட்டுப்படுத்தலாம்
மருத்துவ மாணவர்கள் முயற்சி செய்தால் போதைப்பொருள் பயன்பாட்டை கட்டுப்படுத்தலாம் என்று சுங்க புலனாய்வுத்துறை உதவி கமிஷனர் கூறினார்.
சிவகங்கை,
சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரியில் போதை பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் விளைவுகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. டீன் வனிதா தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக சுங்க புலனாய்வுத்துறை உதவி கமிஷனர்வெங்கடேஷ்பாபு கலந்துகொண்டு பேசியதாவது:-
போதைப்பொருள் விழிப்புணர்வு குறித்து இளைஞர்கள் அறிந்திருக்க வேண்டும். போதைப்பொருள் குறித்தும், அதனை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். அப்போது தான் போதை பொருள்களின் பயன்பாடுகள் குறையும். அதற்கு மருத்துவ மாணவர்களின் பங்கு இன்றியமையாததாகும். மருத்துவ மாணவர்கள் முயற்சி செய்தால் போதைப்பொருள் பயன்பாட்டை குறைத்து விடலாம். மற்ற நாடுகளை ஒப்பிடும் போது இந்தியாவில் இளைஞர்கள் அதிகம். அதன் காரணமாக மற்ற நாடுகளை சேர்ந்தவர்கள் இந்திய இளைஞர்களை போதைக்கு அடிமையாக்க பார்க்கின்றனர்.
பொதுவாக நண்பர்கள் மூலம் தான் போதை பொருள் பழக்கம் ஏற்படும். ஒருமுறை பழகினால் தொடர்ந்து அந்த பழக்கம் வந்து விடும். இதனால் மனநோய் வரும் வாய்ப்பும் உள்ளது. சில சமயம் போதை பழக்கத்திற்கு அடிமையானவர்கள் குற்ற சம்பவங்களில் கூட ஈடுபடுவார்கள். எனவே போதை பழக்கத்திற்கு அடிமையாகாமல் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக மாணவிகள் வெளிஇடங்களுக்கு செல்லும் போது மிக கவனமாக இருக்க வேண்டும். யாரேனும் குளிர்பானங்கள் கொடுத்தால் சாப்பிடாமல் அதனை தவிர்க்க வேண்டும். எனவே மாணவர்கள் இதுபோன்ற விஷயங்களில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். அப்போது தான் குற்ற செயல்களை குறைக்க முடியும்.
இந்த நிகழ்ச்சியில் மருத்துவமனை கண்காணிப்பாளர் அமுதன், மருத்துவ அலுவலர் குழந்தை ஆனந்தன், மனநலபிரிவு தலைமை பேராசிரியர் அமுதா, டாக்டர் முகமதுரபீக் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story