கோவில் திருவிழாவையொட்டி வடமாடு மஞ்சுவிரட்டு


கோவில் திருவிழாவையொட்டி வடமாடு மஞ்சுவிரட்டு
x
தினத்தந்தி 4 May 2018 4:30 AM IST (Updated: 4 May 2018 4:19 AM IST)
t-max-icont-min-icon

தேவகோட்டை அருகே கோவில் திருவிழாவையொட்டி நடந்த வடமாடு மஞ்சுவிரட்டில் சீறிப்பாய்ந்த காளைகளை, மாடுபிடி வீரர்கள் ஆர்வத்துடன் அடக்கினர்.

தேவகோட்டை

தேவகோட்டை அருகே சிறுமருதூர் தாணிச்சாவூரணி கிராமத்தில் நாட்டாள் அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மதுஎடுப்பு திருவிழா நடைபெற்றது. இதனையொட்டி கண்டதேவியில் வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. தாணிச்சாவூரணி தொழில் அதிபர் ராஜ்குமார் அம்பலம் தலைமை தாங்கி மஞ்சுவிரட்டை தொடங்கிவைத்தார். இதில் மொத்தம் 13 காளைகளும், 117 மாடுபிடி வீரர்களும் கலந்துகொண்டனர். போட்டியின் விதிப்படி ஒரு காளைக்கு 25 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டு, அதனை 9 பேர் கொண்ட மாடுபிடி வீரர்கள் குழுவினர் அடக்க வேண்டும். அதன்படி நடைபெற்ற மஞ்சுவிரட்டில் சீறிப்பாய்ந்த காளைகள் மாடுபிடி வீரர்களிடம் ஆக்ரோஷம் காட்டியது.

இந்த மஞ்சுவிரட்டில் சில காளைகள் மாடுபிடி வீரர்களிடம் பிடிப்பட்டன. சில காளைகள் மாடுபிடி வீரர்களை முட்டி தூக்கி வீசியது. இதில் 5 மாடுபிடி வீரர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு அருகில் மருத்துவ வசதி செய்யப்பட்டு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. முடிவில் சிறந்த காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு பரிசு தொகையாக ரூ.5,001 வழங்கப்பட்டது. இதுதவிர சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டது. மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியையொட்டி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பார்வையாளர்கள் கலந்துகொண்டனர். முன்னதாக அவர்களுக்காக மைதானம் சுற்றிலும் கேலரிகள் அமைக்கப்பட்டிருந்தன. பாதுகாப்பு ஏற்பாடுகளை தேவகோட்டை தாலுகா போலீசார் செய்திருந்தனர்.
1 More update

Next Story