மாணவர் சேர்க்கையை அதிகரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை


மாணவர் சேர்க்கையை அதிகரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
x
தினத்தந்தி 4 May 2018 4:30 AM IST (Updated: 4 May 2018 4:28 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் நகராட்சி நடுநிலைப்பள்ளிகளில் வரும் கல்வி ஆண்டிலாவது மாணவ, மாணவிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மாவட்ட தொடக்க கல்வித்துறை கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

விருதுநகர்

பெருந்தலைவர் காமராஜர் பிறந்த விருதுநகர் மாவட்டம் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 வகுப்புகளில் மாநில அளவில் பொதுத்தேர்வுகளில் தொடர்ந்து சாதனை படைத்து வரும் நிலையில் இம்மாவட்டத்தில் தொடக்க கல்வியின் தரம் கேள்விக்குறியாகவே உள்ளது.

மத்திய அரசு இந்த மாவட்டத்தை பின் தங்கிய மாவட்டமாக அறிவித்து வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ள நிலையில் முதல்கட்ட ஆய்வு பணிக்கு வந்த மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் மாவட்டத்தில் தொடக்க கல்வியின் தரம் திருப்திகரமாக இல்லை என குறிப்பிட்டார். இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.

இந்த நிலையில் கிராமப்புற பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அந்த பள்ளிஆசிரியர்கள் பெற்றோர்-ஆசிரியர் கழகத்தினருடன் இணைந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். கிராம மக்களும் தங்கள் கிராமப்பள்ளிகளின் வளர்ச்சியில் அக்கறை கொண்டு பள்ளிக்கு தேவையான பொருட்களை வாங்கி தருவதுடன் பள்ளியில் மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்கவும் ஒத்துழைப்பு தரத்தயாராக உள்ளனர்.

ஆனால் நகர்புறங்களில் நடுநிலைப்பள்ளிகளின் நிலை அதற்கு மாறாக உள்ளது. விருதுநகர் நகராட்சி பகுதியில் 8 நடுநிலைப்பள்ளிகளும், ஒரு உயர்நிலைப்பள்ளியும், ஒரு மேல்நிலைப்பள்ளியும் செயல்பட்டு வருகின்றன. இதில் நடுநிலைப்பள்ளிகளில் நகராட்சி முஸ்லிம் நடுநிலைப்பள்ளி மற்றும் ராமமூர்த்தி ரோட்டில் உள்ள சின்னதங்கச்சியமமாள் நடுநிலைப்பள்ளிஆகிய 2 பள்ளி களில் மட்டுமே மாணவர்களின் எண்ணிக்கை 150-க்கும் மேல் உள்ளது. மற்ற பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை கடந்த கல்வி ஆண்டில் 10 முதல் 60 என்ற அளவிலேயே இருந்தது.

நகராட்சி சார்பில் இந்த நடுநிலைப்பள்ளிகளுக்கான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நிதி நெருக்கடி உள்ள நிலையிலும் புதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் இப்பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வாய்ப்பு இருந்த போதிலும் தொடக்ககல்வித்துறையும், பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களும் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளாத நிலையே உள்ளது.

கிராமப்புறங்களில் உள்ள அரசு பள்ளிஆசிரியர்கள், மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் காட்டும் ஆர்வத்தினை நகராட்சி நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் காட்டுவதில்லை என்று கல்வியாளர் ஒருவர் கருத்து தெரிவித்தார். எனவே விருதுநகர் நகராட்சி நடுநிலைப்பள்ளிகளில் வரும் கல்வியாண்டில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க மாவட்ட தொடக்க கல்வித்துறை கல்வி ஆண்டு தொடங்குவதற்கு முன்னேரே உரிய நடவடிக்கைகள் மேற்கொள்வதுடன் இப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களும் இதற்கான முயற்சிகளை ஆர்வத்துடன் மேற்கொள்ள வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. இல்லையேல் காலப்போக்கில் இந்த நகராட்சி நடுநிலைப்பள்ளிகளை மூட வேண்டிய நிலை ஏற்பட்டு விடும்.

ஒரு பள்ளியை தொடங்குவதற்கு பெரும் சிரமப்பட வேண்டிய நிலையில் அப்பள்ளியில் முறையாக கல்வி பணியை மேற்கொள்ள ஆசிரியர்கள் ஆர்வம் காட்ட வேண்டியது அவசியம் ஆகும்.

Next Story