ஏற்கனவே வீடு வைத்திருக்கும் நீதிபதிகள், அதிகாரிகளுக்கு அரசு குடியிருப்பு வழங்கக்கூடாது


ஏற்கனவே வீடு வைத்திருக்கும் நீதிபதிகள், அதிகாரிகளுக்கு அரசு குடியிருப்பு வழங்கக்கூடாது
x
தினத்தந்தி 4 May 2018 5:08 AM IST (Updated: 4 May 2018 5:08 AM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் ஏற்கனவே வீடு வைத்திருக்கும் நீதிபதிகள், அதிகாரிகளுக்கு அரசு குடியிருப்பு வழங்கக்கூடாது என மும்பை ஐகோர்ட்டு தெரிவித்து உள்ளது.

மும்பை,

மராட்டிய அரசு கடந்த 2015-ம் ஆண்டு மும்பை ஒஷிவாரா பகுதியில் நீதிபதிகள் குடியிருப்பு கட்டுவதற்கு அரசாணை வெளியிட்டது. இந்தநிலையில் மும்பையை சேர்ந்த சமூக ஆர்வலர் கேதான் திரோதர் இதனை எதிர்த்து மும்பை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், ஒஷிவாரா நீதிபதிகள் குடியிருப்பில் மும்பை ஐகோர்ட்டில் இருந்து பணி ஓய்வு பெற்ற நீதிபதிகள், சுப்ரீம் கோர்ட்டுக்கு பதவி உயர்வு பெற்று சென்ற நீதிபதிகள் ஆகியோருக்கும் வீடுகள் ஒதுக்கப்பட்டு இருப்பதாக வாதிட்டார்.

இதைத்தொடர்ந்து நீதிபதி பி.ஆர்.கவாய், ‘மராட்டியத்தில் அல்லது மும்பையில் ஏற்கனவே வீடு வைத்திருக்கும் நீதிபதிகள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு வேறொரு வீடு எந்தவொரு அரசு திட்டத்தின் கீழும் வழங்கப்படக்கூடாது’ என தெரிவித்தார்.

இது தொடர்பாக முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசின் நிலைப்பாட்டை உடனடியாக தெரியப்படுத்தும்படி அரசு வக்கீல் அசுதோஷ் கும்பகோனிக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து வழக்கு விசாரணை இன்று(வெள்ளிக்கிழமை) தள்ளி வைக்கப்பட்டது. 

Next Story