கணினி நகரமான பெங்களூருவை குற்ற நகரமாக மாற்றிவிட்டது பிரதமர் தாக்கு


கணினி நகரமான பெங்களூருவை குற்ற நகரமாக மாற்றிவிட்டது பிரதமர் தாக்கு
x
தினத்தந்தி 4 May 2018 5:35 AM IST (Updated: 4 May 2018 5:35 AM IST)
t-max-icont-min-icon

கணினி நகரமான பெங்களூரு குற்ற நகரமாக மாறிவிட்டது என்றும், காங்கிரஸ் ஆட்சியை மக்கள் தூக்கி எறிய வேண்டும் என்றும் பிரதமர் மோடி கடுமையாக தாக்கி பேசினார்.

பெங்களூரு,

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி பெங்களூரு கெங்கேரியில் பா.ஜனதா தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அவர் சரியாக மாலை 5.30 மணிக்கு பேச்சை தொடங்கி 6.20-க்கு நிறைவு செய்தார். 50 நிமிடங்கள் பேசினார். தனது பேச்சு முழுவதும் காங்கிரஸ் ஆட்சியை கடுமையாக விமர்சித்தார். அவர் பேசியதாவது:-

பெங்களூருவில் சாலைகளில் குழிகளை இந்த அரசு மூடவில்லை. போக்குவரத்து நெரிசலுக்கு இந்த அரசு தீர்வு காணவில்லை. இதன் காரணமாக பலர் தங்களின் உயிரை இழந்துள்ளனர். இரும்பு மேம்பாலம் அமைத்து அதன் மூலம் ஊழல் செய்ய காங்கிரஸ் அரசு திட்டமிட்டது. அதை பா.ஜனதா போராடி தடுத்து நிறுத்தியது.

அது ‘ஸ்டீல்‘(இரும்பு) மேம்பால திட்டம் கிடையாது. ‘ஸ்டீல்‘(திருட்டு) மேம்பால திட்டம் ஆகும். கர்நாடகத்தில் ஊழல் செய்வதில் மந்திரிகள் இடையே கடும் போட்டி இருக்கிறது. இதனால் மக்கள் வெறுப்பில் உள்ளனர். காங்கிரஸ் கட்சியின் கடைசி ஆட்சியை தூக்கி எறிய கர்நாடக மக்கள் முடிவு செய்துவிட்டனர்.

நான் கடந்த 2 நாட்களாக மாநிலத்தில் பல்வேறு இடங்களில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டேன். செல்லும் இடமெல்லாம் மக்கள் இதே போல் அதிக எண்ணிக்கையில் வந்து ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். இதை பார்க்கும்போது ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி என்பது தெளிவாக தெரிகிறது. கர்நாடகத்தில் எடியூரப்பா தலைமையில் பா.ஜனதா ஆட்சி அமைவது உறுதி. காங்கிரசார் நம்பிக்கை இழந்துவிட்டதால், தொங்கு சட்டசபை அமையும் என்று பொய்யான தகவல்களை பரப்புகிறார்கள்.

கடந்த 4 ஆண்டுகளில் எந்தெந்த மாநிலங்களில் எல்லாம் இவ்வாறு தவறான தகவல்களை பரப்பினார்களோ அந்த மாநிலங்களில் எல்லாம் காங்கிரஸ் தோல்வியை தழுவியது. ஜனதா தளம்(எஸ்) தத்தளித்து தத்தளித்து 3-வது இடத்தை தான் பிடிக்கும் என்று அரசியல் நிபுணர்கள் சொல்கிறார்கள். அதனால் கர்நாடக மக்கள் அந்த கட்சிக்கு ஓட்டுப்போட்டு, உங்களின் பொன்னான வாக்கை வீணாக்க வேண்டாம். மதவாத அமைப்புகள், நக்சலைட்டுகளுடன் ஜனதா தளம்(எஸ்) கைகோர்த்துள்ளது. அந்த கட்சியை மக்கள் புறக்கணிக்க வேண்டும்.

திறமையான இளைஞர்கள் பெங்களூருவை கணினி நகரமாக மாற்றியுள்ளனர். ஆனால் கடந்த 5 ஆண்டுகளில் காங்கிரஸ் அரசு இதை குற்றங்களின் நகரமாக மாற்றிவிட்டது. பெங்களூருவை பூங்கா நகரமாக மற்ற மக்கள் கடுமையாக கஷ்டப்படுகிறார்கள். ஆனால் ஆட்சியில் உள்ளவர்கள், இந்த நகரத்தை குப்பை நகரமாக மாற்றிவிட்டனர். ஊழலை ஒழிக்க காங்கிரஸ் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பொய் பேசுவதில் காங்கிரசார் நிபுணர்கள். பொய்யை திரும்ப திரும்ப சொல்லி மக்களை திசை திருப்ப முயற்சி செய்கிறார்கள்.

கெம்பேகவுடா உருவாக்கிய பெங்களூருவில் ஏராளமான ஏரிகள் உள்ளன. ஆனால் பெல்லந்தூர் ஏரியில் தற்போது தீப்பற்றி எரிகிறது. அதை பாதுகாக்க மாநில அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பெங்களூருவில் காங்கிரசை சேர்ந்த ஒரு எம்.எல்.ஏ.வின் மகன் ஒரு இளைஞர் மீது கடுமையாக தாக்கி இருக்கிறார். அத்தகைய நபரை இந்த அரசு பாதுகாக்கிறது.

அனைத்து மாவட்டங்களிலும் உயர் பல்நோக்கு மருத்துவமனை அமைக்கப்படும் என்று கடந்த தேர்தலின்போது காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் கூறி இருந்தது. ஆனால் அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. இப்போது வெளியிட்டுள்ள அந்த கட்சியின் தேர்தல் அறிக்கையில், 3 மாவட்டங்களுக்கு ஒரு உயர் பல்நோக்கு மருத்துவமனை அமைக்கப்படும் என்று கூறி இருக்கிறார்கள். தலித், சிறுபான்மை மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு காங்கிரஸ் அரசு எதையும் செய்யவில்லை. பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த என்னை பா.ஜனதா பிரதமர் பதவியில் அமர்த்தியுள்ளது.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கர்நாடகத்திற்கு ரூ.836 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. இதில் வெறும் ரூ.12 கோடியை மட்டுமே இந்த காங்கிரஸ் அரசு செலவு செய்துள்ளது. மத்திய அரசு கொடுத்த நிதியை கூட செலவு செய்ய முடியவில்லை என்றால் இந்த அரசு எதற்காக இருக்க வேண்டும்?.

வருகிற 12-ந் தேதி நடைபெறும் தேர்தலில் கர்நாடக மக்கள் பாஜனதாவுக்கு ஓட்டுப்போட்டு வெற்றி பெற செய்ய வேண்டும். அதன் மூலம் கர்நாடகத்தில் பா.ஜனதா நல்லாட்சியை நடத்தும். கர்நாடக மக்களுக்கு உதவிகளை செய்ய மத்திய அரசு தயாராக உள்ளது.

இவ்வாறு மோடி பேசினார்.

கன்னடத்தில் சில வார்த்தைகள் மூலம் பேச்சை தொடங்கிய மோடி இந்தியில் பேசினார். அவரது இந்தி மொழி பேச்சை மத்திய மந்திரி அனந்தகுமார் கன்னடத்தில் மொழி பெயர்த்து கூறினார். மோடி தனது உரையை தொடங்கும்போது கூட்ட மேடைக்கு எஸ்.எம்.கிருஷ்ணா வந்தார். அவரை மோடி வரவேற்றார். பேச்சை முடித்ததும் மோடி உடனடியாக அனைவரிடமும் விடைபெற்று சென்றார். கூட்ட மேடையில் பா.ஜனதா வேட்பாளர்களும் அமர்ந்து இருந்தனர்.

மோடி இன்று(வெள்ளிக்கிழமை) பா.ஜனதா மகளிர் அணி நிர்வாகிகளுடன் டெல்லியில் இருந்தபடி கலந்துரையாடல் நடத்துகிறார். பின்னர் அவர் மீண்டும் நாளை(சனிக்கிழமை) கர்நாடகம் வந்து பிரசாரம் மேற்கொள்கிறார். 

Next Story