மின்கம்பத்தில் மின்னல் தாக்கியதில் பூமிக்குள் இருந்து புகையுடன் வெளிவந்த பாறைக்குழம்பு


மின்கம்பத்தில் மின்னல் தாக்கியதில் பூமிக்குள் இருந்து புகையுடன் வெளிவந்த பாறைக்குழம்பு
x
தினத்தந்தி 4 May 2018 11:00 PM GMT (Updated: 4 May 2018 8:17 PM GMT)

பொங்கலூர் அருகே மின்கம்பத்தில் மின்னல் தாக்கியதில் பூமிக்குள் இருந்து புகையுடன் பாறைக்குழம்பு வெளிவந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பொங்கலூர்,

திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் அருகே கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து கொடுவாய் செல்லும் சாலையில் தனியாருக்கு சொந்தமான பால் பண்ணை உள்ளது. இந்த பால் பண்ணையையொட்டி பி.ஏ.பி. வாய்க்கால் செல்கிறது. அந்த வாய்க்கால் கரையோரத்தில் பால் பண்ணைக்கு உயர் அழுத்த மின்சாரம் கொண்டு செல்லும் மின்கம்பங்கள் உள்ளன.

இந்த நிலையில் நேற்று காலை இந்த பகுதி வழியாக சிலர் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது, பால் பண்ணைக்கு மின்சாரம் கொண்டு செல்லப்படும் மின்கம்பங்களில் ஒரு மின்கம்பத்தில் மின்னல் தாக்கியதால், அதன் அருகில் இருந்து புகை வந்து கொண்டிருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள், அதன் அருகில் சென்றுபார்த்தனர்.

அப்போது பூமிக்குள் இருந்து வெண்நிற புகையுடன் கருப்பு நிறத்தில் பாறைக்குழம்பு வெளியே வந்து கொண்டிருந்தது. உடனே இதுபற்றி மின் வாரியத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அத்துடன் இந்த தகவல் அந்த பகுதியில் காட்டுத்தீபோல் பரவியது.

இதன்காரணமாக அந்த பகுதியில் பொதுமக்கள் திரண்டனர். அவர்கள் பாறைக்குழம்பு வெளிவருவதை ஆவலுடன் பார்த்து சென்றனர். இதற்கிடையே சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மின்வாரிய அதிகாரிகள், அந்த பால் பண்ணைக்கு செல்லும் மின்சாரத்தை துண்டித்தனர். பின்னர் அந்த மின்கம்பத்தை ஆய்வுசெய்தனர்.

இதுபற்றி மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, நேற்று முன்தினம் நள்ளிரவில் பொங்கலூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் இடி-மின்னலுடன் பலத்தமழை பெய்தது. இந்த மழை அதிகாலை வரை நீடித்தது. அப்போது, இந்த மின்கம்பத்தில் மின்னல் தாக்கியதில், மின்கம்பத்தில் இணைக்கப்பட்டுள்ள ‘எர்த்‘ கம்பி மூலம் மின்னல் பூமியில் இறங்கியுள்ளது. இவ்வாறு மின்னல் தாக்கும் போது, அதிக அளவு மின்சாரம் பூமிக்குள் செல்லும். அதனால் அதிக வெப்பம் உண்டாகி பூமிக்குள் மேல் அடுக்கில் உள்ள பாறைகள் உருகி வெளியே வந்திருக்கலாம்” என்றனர்.

மேலும் பொங்கலூர் அருகே கொடுவாய் செல்லும் சாலையின் ஓரத்தில் இருந்த வேப்பமரத்தில் மின்னல் தாக்கியதால், அந்த மரத்தின் பட்டைகள் உரிந்து காணப்பட்டது. மின்னல் தாக்கிய பகுதியில் வீடுகளோ, கால்நடைகளோ இல்லாததால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

Next Story