இரியசீகை கிராமத்துக்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம், வனப்பகுதிக்குள் விரட்ட கோரிக்கை


இரியசீகை கிராமத்துக்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம், வனப்பகுதிக்குள் விரட்ட கோரிக்கை
x
தினத்தந்தி 5 May 2018 3:15 AM IST (Updated: 5 May 2018 1:47 AM IST)
t-max-icont-min-icon

இரியசீகை கிராமத்துக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள் ளனர்.

மஞ்சூர்,

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே இரிய சீகை கிராமம் உள்ளது. இந்த கிராமம் தமிழக- கேரள மாநில எல்லையோரத்தில் உள்ளது. இந்த கிராமத்தை சுற்றிலும் அடர்ந்த வனப்பகுதிகள் உள்ளன. இங்கு யானை, சிறுத்தைப்புலி, கரடி, காட்டெருமை உட்பட வன விலங்குகள் உள்ளன. சில நாட்களாக சிறுத்தைப்புலி குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து ஆடு, மாடுகளை அடித்து கொல்வது தொடர் கதையாகிவிட்டது.

தற்போது கோடை காலம் தொடங்கிவிட்டதால் தண்ணீர் தேடி காட்டு யானைகளும் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. காட்டு யானைகளை தீப்பந்தங்கள் கொளுத்தியும், ஒலி எழுப்பியும், பட்டாசு வெடித்தும் வனத்துறையினர், பொதுமக்கள் விரட்டி வருகிறார்கள். குடியிருப்பு பகுதியில் யானைகள் நடமாட்டம் இருப்பதால் கிராம மக்கள் மிகவும் அச்சத்துடன் உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு இரிய சீகை கிராமம் அருகே வனத்துறைக்கு சொந்தமான கண்காணிப்பு கோபுரம் அமைந்துள்ள முகாமில் காட்டு யானைகள் புகுந்தன. பின்னர் காட்டு யானைகள் அங்கிருந்த தொட்டியில் தண்ணீரை குடித்துவிட்டு அதை உடைத்து சேதப்படுத்தியது. மேலும் இரும்பு கதவையும் சேதப்படுத்தி விட்டு காட்டு யானைகள் அங்கிருந்து சென்றுவிட்டன.

யானைகள் அங்கு வந்த நேரத்தில் வனத்துறை ஊழியர்கள் இல்லை. இரிய சீகை குடியிருப்பு பகுதியில் காட்டு யானைகள் தொடர்ந்து முகாமிட்டு இருப்பதால் வீடுகளை விட்டு வெளியே வர பொதுமக்கள் அச்சப்படுகிறார்கள். அசம்பாவித சம்பவங்கள் நடைபெறும் முன்பு கூடுதலாக வனத்துறையினரை பணியமர்த்தி யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story