ராமேசுவரத்தில் இறால் பண்ணைகளை அகற்றக்கோரி தாலுகா அலுவலகத்தில் கிராம மக்கள் காத்திருப்பு போராட்டம்


ராமேசுவரத்தில் இறால் பண்ணைகளை அகற்றக்கோரி தாலுகா அலுவலகத்தில் கிராம மக்கள் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 5 May 2018 4:30 AM IST (Updated: 5 May 2018 1:47 AM IST)
t-max-icont-min-icon

ராமேசுவரத்தில் இறால் பண்ணைகளை அகற்றக்கோரி தாலுகா அலுவலகத்தில் கிராம மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராமேசுவரம்,

ராமேசுவரம் தீவு பகுதியில் சம்பை, மாங்காடு, வடகாடு, அரியாங்குண்டு, குடியிருப்பு, சுடுகாட்டம்பட்டி, ஏரகாடு, சந்தியாநகர் உள்பட 12 கிராமங்களில் தனியார் இறால் பண்ணைகள் உள்ளன. இந்த பண்ணைகளை அகற்றக்கோரி தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் கிராம மக்கள் குடும்பங்களுடன் தாலுகா அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்துக்கு மீன்பிடி தொழிற்சங்க மாவட்ட செயலாளர் கருணாமூர்த்தி தலைமை தாங்கினார். கிராம தலைவர்கள் சுப்பிரமணியன், கர்ணன், கணேசன், அருள்தாஸ், குமரன், குப்பாண்டி, சேதுராஜன், அந்தோணி சந்தியா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் சிவாஜி, மாவட்ட துணை தலைவர் ஜஸ்டின், மாவட்ட பொருளாளர் செந்தில், ஜேம்ஸ் ஜஸ்டின், அருள்ராஜ், நிர்மலா உள்பட பலர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

அப்போது சுற்றுச்சூழல் மற்றும் நீர் ஆதாரத்துக்கு கேடு விளைவிக்கும் இறால் பண்ணைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தினர். தகவல் அறிந்ததும் ராமநாதபுரம் ஆர்.டி.ஓ. சுமன், தாசில்தார் சந்திரன் போலீஸ் துணை சூப்பிரண்டு (பொறுப்பு) இளங்கோ மற்றும் அதிகாரிகள் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அரசு புறம்போக்கு நிலத்தில் உள்ள இறால் பண்ணைகளை அகற்ற நடவடிக்கை எடுப்பது எனவும், விதிகளை மீறி செயல்படும் இறால் பண்ணைகளை ஆய்வு செய்து அகற்ற நடவடிக்கை எடுப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது. அதன் பிறகு சுமார் 3½ மணி நேரம் நீடித்த இந்த போராட்டம் முடிவுக்கு வந்தது. மேலும் கோரிக்கை மனு தமிழக அரசு, அரசு செயலாளர், மாவட்ட கலெக்டர், மீன்வளத்துறை இயக்குனர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Next Story