பள்ளி வாகனங்களுக்கு தகுதிச்சான்று வழங்க ஆய்வு: கலெக்டர் லதா தொடங்கி வைத்தார்


பள்ளி வாகனங்களுக்கு தகுதிச்சான்று வழங்க ஆய்வு: கலெக்டர் லதா தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 5 May 2018 3:45 AM IST (Updated: 5 May 2018 1:47 AM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பள்ளி வாகனங்களுக்கு தகுதிச் சான்று வழங்குவதற்கான ஆய்வை மாவட்ட கலெக்டர் லதா தொடங்கி வைத்தார்.

சிவகங்கை,

பள்ளி குழந்தைகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் உரிய பாதுகாப்பு விதிகளின்படி உள்ளதா என்பதை ஒவ்வொரு ஆண்டும் சம்பந்தபட்ட அதிகாரிகள் ஆய்வு நடத்தி உறுதி செய்து அதன் பின்னர் அந்த பள்ளி வாகனங்களுக்கு தகுதி சான்று வழங்குவார்கள். அந்த தகுதிச் சான்று பெற்ற பின்னர் தான் அந்தந்த பள்ளி வாகனங்களில் பள்ளி குழந்தைகளை ஏற்றி செல்ல முடியும்.

இந்த ஆய்வில் அந்த மாவட்டத்தில் உள்ள கோட்டாட்சியர், மாவட்ட போலீஸ் துணை கண்காணிப்பாளர், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி, வட்டார போக்குவரத்து அதிகாரி ஆகியோர் ஈடுபடுவார்கள். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பள்ளி வாகனங்களுக்கு தகுதிச்சான்று வழங்குவதற்கான ஆய்வு நேற்று சிவகங்கையில் நடைபெற்றது.

மாவட்ட கலெக்டர் லதா தலைமை தாங்கி ஆய்வை தொடங்கி வைத்து பேசியதாவது:- பள்ளி குழந்தைகளை ஏற்றிச்செல்லும் வாகனங்களின் டிரைவர்கள் முதலில் வாகனங்களை முறையாக பராமரிக்க வேண்டும். வேகத்தை குறைத்து சாலை விதிமுறைகளை பின்பற்றி செல்ல வேண்டும்.

விபத்துகள் ஏற்பட்டால் பாதிப்பு முதலில் வருவது நமக்குதான் என்பதை டிரைவர்கள் உணர்ந்து பொறுப்புடன் செயல்பட வேண்டும். சிவகங்கை பகுதியில் உள்ள 80 பள்ளிகளைச் சேர்ந்த 250 பள்ளி வாகனங்களுக்கும், காரைக்குடி பகுதியில் உள்ள 50 பள்ளிகளைச் சேர்ந்த 228 பள்ளி வாகனங்களுக்கும் தகுதிசான்று வழங்க ஆய்வுப்பணி தொடங்கி உள்ளது.

வருகிற 30-ந் தேதிக்குள் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி வாகனங்களையும் ஆய்வு செய்து தகுதிச்சான்று வழங்கப்படும். இந்த ஆய்வின் போது வாகனங்களில் குறைபாடுகள் கண்டறியப்பட்டால் உடனடியாக சரிசெய்து வர அறிவுறுத்தப்படும். வாகனங்களின் கதவுகளை சரி செய்யாத வாகனங்கள் இயக்குவதற்கு கண்டிப்பாக அனுமதி வழங்க இயலாது. இவ்வாறு அவர் கூறினார்.

இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன், சிவகங்கை கோட்டாட்சியர் ராமபிரதீபன், மாவட்ட முதன்மைகல்வி அதிகாரி ஆஞ்சலோ இருதயசாமி ஆகியோர் ஒவ்வொரு வாகனத்திலும் தேவையான பாதுகாப்பு அம்சங்கள் உள்ளதா என்றும், அந்த வாகனங்கள் நல்ல முறையில் இயங்குகிறதா என்றும் ஆய்வு செய்தனர். மேலும் அந்த பள்ளி வாகனங்களில் தீயணைப்புத் துறையின் மூலம் பள்ளி வாகனங்களில் பொருத்தப்பட்டு உள்ள தீ தடுப்பு கருவியின் செயல்பாடு குறித்து அனைத்து வாகன ஓட்டுனர்களுக்கும் செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.

இதேபோல் காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் காரைக்குடி மற்றும் தேவகோட்டை பகுதியில் உள்ள பள்ளிகளைச் சேர்ந்த பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இந்த ஆய்வில் சிவகங்கை வட்டார போக்குவரத்து அலுவலர் திருவள்ளுவன், காரைக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு காாத்திகேயன், தேவகோட்டை மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் காரைக்குடி வட்டார மோட்டார் வாகன ஆய்வாளர் அருண்குமார் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதில் காரைக்குடி மற்றும் தேவகோட்டை பகுதியைச் சேர்ந்த பள்ளிகளைச் சேர்ந்த 142 பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன. 

Next Story