மாவட்ட செய்திகள்

சாலை விபத்தில் முன்னாள் ராணுவ வீரர் உள்பட 2 பேர் சாவு + "||" + Two people including a former soldier killed in road accidents

சாலை விபத்தில் முன்னாள் ராணுவ வீரர் உள்பட 2 பேர் சாவு

சாலை விபத்தில் முன்னாள் ராணுவ வீரர் உள்பட 2 பேர் சாவு
வேலூர் அருகே, வெவ்வேறு சம்பவங்களில் சாலை விபத்தில் முன்னாள் ராணுவவீரர் உள்பட 2 பேர் உயிரிழந்தனர்.
வேலூர்,

அணைக்கட்டு தாலுகா அரியூர்குப்பம் கிராமம், பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் பழனி (வயது 56), முன்னாள் ராணுவவீரர். இவர், தற்போது ஓட்டேரியில் உள்ள தனியார் பள்ளியில் வேன் டிரைவராக பணியாற்றி வந்தார். பழனி நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் வேலூர் - அணைக்கட்டு சாலை அரியூர் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக எதிரே வந்த லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த பழனி தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.


இதுகுறித்து தகவல் அறிந்த அரியூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பழனியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் வாலாஜா தாலுகா அரப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் லோகநாதன். இவருடைய மனைவி லட்சுமி. இவர்களது மகன் குமரேசன் (வயது 23). லோகநாதன், லட்சுமி, குமரேசன் ஆகியோர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள மோட்டார் சைக்கிளில் வேலூருக்கு வந்தனர். மோட்டார் சைக்கிளை குமரேசன் ஓட்டினார். நிகழ்ச்சி முடிந்து இரவு 10 மணி அளவில் 3 பேரும் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர்.

வேலூரை அடுத்த பெருமுகை அருகே சென்றபோது மோட்டார் சைக்கிள் திடீரென நிலைத்தடுமாறி சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதியது. இந்த விபத்தில் குமரேசன் பலத்த காயம் அடைந்தார். மற்ற இருவருக்கும் லேசான காயம் ஏற்பட்டது.

இதைக்கண்ட அப்பகுதியை சேர்ந்தவர்கள் 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். குமரேசன் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். லோகநாதனுக்கும், லட்சுமிக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக சத்துவாச்சாரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.