ஆழித்தேரோட்ட விழாவை சிறப்பாக நடத்த அனைத்து அலுவலர்களும் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் - கலெக்டர்


ஆழித்தேரோட்ட விழாவை சிறப்பாக நடத்த அனைத்து அலுவலர்களும் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் - கலெக்டர்
x
தினத்தந்தி 4 May 2018 11:45 PM GMT (Updated: 4 May 2018 10:50 PM GMT)

ஆழித்தேரோட்ட விழாவை சிறப்பாக நடத்த அனைத்து அலுவலர்களும் முழு ஒத்துழைப்பு தரவேண்டும் என்று, கலெக்டர் கூறினார்.

திருவாரூர்,

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்டத்தை சிறப்பாக நடத்துவது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் நிர்மல்ராஜ் தலைமை தாங்கி, பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்ட விழாவை முன்னிட்டு வருகிற 27-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 4.30 மணிக்கு விநாயகர், சுப்பிரமணியர் தேரோட்டத்துக்கு வடம் பிடிக்கப்படும். 6 மணி முதல் 7 மணிக்குள் ஆழித்தேர், அம்மன், சண்டிகேஸ்வரர் தேர் வடம் பிடிக்கப்பட்டு தேரோட்டம் நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு போலீசார் தேருக்கு முன்னும், பின்னும் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொடுக்க வேண்டும். மேலும் நகருக்குள் போக்குவரத்தை மாற்றி கொடுக்க வேண்டும்.

தேரோட்டத்தின் போது தேர் சக்கரங்களை சுற்றி பொதுமக்கள் வராமலிருக்க கயிறு வளையம் அமைக்க வேண்டும். நகராட்சி சார்பில் தேரோட்ட வீதிகளில் தேவையான இடங்களில் குடிநீர் வசதி மற்றும் கழிவறைகள் செய்து கொடுக்க வேண்டும். சுகாதார வசதிகள் செய்திட வேண்டும். தீயணைப்புத்துறையின் வாகனம் தேருக்கு அருகில் இருக்க வேண்டும். மருத்துவக்குழு அடங்கிய ஆம்புலன்ஸ் வாகனம் தேரின் பின்னால் தொடர்ந்து வர வேண்டும்.

விழாவில் தடையில்லா மின்சாரம் வழங்கி மின்வாரிய துறை தேவையான ஏற்பாடுகள் செய்ய வேண்டும். நெடுஞ்சாலைத்துறை தேரோடும் 4 வீதிகளிலும் சாலையின் மைய பகுதியினை தெளிவுப்படுத்தும் வகையில் வெள்ளை கோடு வசதி செய்து கொடுக்க வேண்டும். தேரோட்டத்தையொட்டி அரசு மருத்துவமனைகளில் பகல், இரவு முழுவதும் கூடுதலாக டாக்டர், செவிலியர் மற்றும் உதவியாளர்கள் பணிபுரிய ஏற்பாடு செய்ய வேண்டும்.

தேரோடும் வீதிகளில் தற்காலிக மருத்துவ முகாம் வசதி செய்து தர வேண்டும். அரசு போக்குவரத்து கழகம் சார்பில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் தேரோட்ட விழாவில் கலந்து கொண்டு எளிதாக திரும்பி செல்லும் வகையில் சிறப்பு பஸ் வசதி செய்து கொடுக்க வேண்டும். ஆழித்தேரோட்ட நிகழ்ச்சியை சிறப்பாக நடத்துவதற்கு அனைத்து அலுவலர்களின் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் இவ்வாறு கலெக்டர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி சக்திமணி, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜான்ஜோசப், திருவாரூர் உதவி கலெக்டர் (பொறுப்பு) மலர்கொடி, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் தென்னரசு, உதவி ஆணையர் கிருஷ்ணன், கோவில் செயல் அதிகாரி ராஜேந்திரன், தாசில்தார் ராஜன்பாபு, திருவாரூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story