மழைக்காலத்தின் போது 14 நாட்கள் மின்சார ரெயில் சேவை எண்ணிக்கை குறைப்பு


மழைக்காலத்தின் போது 14 நாட்கள் மின்சார ரெயில் சேவை எண்ணிக்கை குறைப்பு
x
தினத்தந்தி 5 May 2018 4:49 AM IST (Updated: 5 May 2018 4:49 AM IST)
t-max-icont-min-icon

மழைக்காலத்தின் போது 14 நாட்கள் மின்சார ரெயில் சேவை எண்ணிக்கையை மத்திய ரெயில்வே குறைத்து உள்ளது.

மும்பை,

மும்பையில் ஆண்டுதோறும் மழைக்காலத்தில் ரெயில் சேவைகள் பாதிக்கப்படுவது வாடிக்கையாக இருந்து வருகிறது. கனமழையின் போது பல இடங்களில் தண்டவாளங்கள் வெள்ளநீரில் மூழ்கி ரெயில் சேவை அடியோடு முடங்கிய சம்பவங்களும் நடந்து உள்ளன. மழைக்காலத்தில் ஏற்படும் ரெயில் சேவை பாதிப்பு பயணிகளுக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது.

கடந்த ஆண்டு ஆகஸ்டு 29-ந்தேதி கனமழையின் காரணமாக 35 ரெயில்கள் நடுவழியில் நின்றன. அந்த ரெயில்களில் இருந்த பயணிகள் பரிதவித்தனர். டீசல் என்ஜின்கள் மூலம் அந்த ரெயில்கள் மீட்கப்பட்டன. ரெயில் சேவை சீரடைய 5 நாட்கள் ஆனது.

இந்த ஆண்டு மழைக்காலத்தின் போது ஜூன் முதல் செப்டம்பர் வரை 14 நாட்கள் கடலில் அலையின் சீற்றம் அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நேரங்களில் கனமழை பெய்யும் பட்சத்தில் தண்டவாளங்களில் தண்ணீர் தேங்கும் என்பதால் ரெயில் சேவை பாதிக்கும்.

எனவே இந்த நாட்களில் ரெயில்கள் ஒன்றன் பின் ஒன்றாக நடுவழியில் சிக்கி ரெயில் சேவை முற்றிலுமாக முடங்குவதை தடுக்கும் நடவடிக்கையாக மேற்கண்ட நாட்களில் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி குறைவான மின்சார ரெயில் சேவைகளை இயக்க மத்திய ரெயில்வே முடிவு செய்து உள்ளது.

இதன்படி மேற்கண்ட வார நாட்களில் இயக்கப்படும் 1,732 சேவைகளுக்கு பதிலாக 1,384 சேவைகள் மட்டுமே இயக்கப்படும். ஒருவேளை மேற்கண்ட நாட்களில் கனமழை பெய்யாத பட்சத்தில் வழக்கமான எண்ணிக்கையில் ரெயில் சேவை இயக்கப்படும் என மத்திய ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். 

Next Story