சுற்றுலா வளர்ச்சி கழக ஊழியர்கள் பணிக்கு திரும்பாவிட்டால் சம்பளம் வழங்கப்படாது - அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் எச்சரிக்கை


சுற்றுலா வளர்ச்சி கழக ஊழியர்கள் பணிக்கு திரும்பாவிட்டால் சம்பளம் வழங்கப்படாது - அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் எச்சரிக்கை
x
தினத்தந்தி 5 May 2018 4:00 AM IST (Updated: 5 May 2018 4:59 AM IST)
t-max-icont-min-icon

சுற்றுலா வளர்ச்சி கழக ஊழியர்கள் பணிக்கு திரும்பாவிட்டால் சம்பளம் வழங்கப்பட மாட்டாது என்று அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் எச்சரிக்கை விடுத்தார்.

புதுச்சேரி,

நோணாங்குப்பம் சுண்ணாம்பாறு படகு குழாம் அருகே தனியார் படகு குழாம் அமைக்க அரசு அனுமதி அளித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து சுற்றுலா வளர்ச்சி கழக ஊழியர்கள் கடந்த 25-ந்தேதி முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சுண்ணாம்பாறு படகு குழாம் உள்பட சுற்றுலா வளர்ச்சி கழகத்துக்கு சொந்தமான நிறுவனங்கள் மூடப்பட்டு உள்ளன. இதனால் அரசுக்கு ரூ.5 கோடி வரை வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் நேற்று ஊழியர்களின் போராட்டம் 10-வது நாளாக நீடித்தது. புதுவை கோலாஸ் நகரில் உள்ள சுற்றுலா வளர்ச்சி கழக தலைமை அலுவலகம் முன்பு ஊழியர்கள் தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஊழியர்களின் போராட்டம் காரணமாக புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் செல்கின்றனர்.

இந்தநிலையில் சுற்றுலா வளர்ச்சி கழக ஊழியர்களின் போராட்டம் குறித்து அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சுற்றுலா வளர்ச்சி கழக ஊழியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும், அவ்வாறு பணிக்கு திரும்பாவிட்டால் அவர்களுக்கு சம்பளம் வழங்கப்பட மாட்டாது என்று தெரிவித்தார்.

Next Story