மணல் கடத்தலுக்கு உதவிய துணை தாசில்தாரை பணி நீக்கம் செய்ய வேண்டும் - கவர்னர் கிரண்பெடி உத்தரவு


மணல் கடத்தலுக்கு உதவிய துணை தாசில்தாரை பணி நீக்கம் செய்ய வேண்டும் - கவர்னர் கிரண்பெடி உத்தரவு
x
தினத்தந்தி 4 May 2018 10:45 PM GMT (Updated: 4 May 2018 11:32 PM GMT)

மணல் கடத்தலுக்கு உதவிய துணை தாசில்தாரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று கவர்னர் கிரண்பெடி உத்தரவிட்டுள்ளார்.

புதுச்சேரி,

புதுவை பாகூர் பகுதியில் மணல் கடத்திய வண்டிகளை பொதுப்பணித்துறை ஊழியர்கள் பிடித்து கொடுத்த நிலையில் மணல் கடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் துணை தாசில்தார் ஒருவர் தப்பவிட்டுள்ளார். இதுகுறித்த வீடியோ காட்சியை பார்த்தும் கவர்னர் கிரண்பெடி கடும் கோபம் அடைந்தார். சம்பந்தப்பட்ட துணை தாசில்தார் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக கவர்னர் கிரண்பெடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

இந்த சம்பவம் தொடர்பாக வருவாய்த்துறை செயலாளர் திவேஷ், கவர்னர் மாளிகையின் குறைகேட்பு அதிகாரி பாஸ்கர் ஆகியோரை சம்பவ இடத்துக்கு நேரடியாக சென்று பார்வையிட்டு மணல் கடத்தலை தடுப்பதற்கான வழிகளை காண கேட்டுக்கொண்டுள்ளேன். இதுதொடர்பாக அரசு செயலாளர்கள் கூட்டத்திலும் பேசப்பட்டுள்ளது.

பொதுப்பணித்துறை ஊழியர் தடுத்தும் மணல் கடத்திய லாரிகளை துணை தாசில்தார் தனது அதிகாரத்தை பயன்படுத்தி விடுவித்துள்ளார். மணல் கடத்தல் கும்பலிடம் கையூட்டுப்பெற்று கொண்டு இதுபோன்ற செயல்களை கண்டும் காணாமல் இருந்துவந்துள்ளார்.

இத்தகைய சூழ்நிலையில் சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை ஊழியரின் மோட்டார் சைக்கிளும் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. இதில் இருந்து அரசு அதிகாரிகள் சட்டவிரோதமாக மணல் கடத்தலை ஆதரிப்பது தெரியவந்துள்ளது.

சம்பந்தப்பட்ட அதிகாரி பணியில் இருந்து நீக்கப்பட வேண்டும். அவர் மீது காவல்துறையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவேண்டும். ஊழலில் திளைக்கும் அரசு அதிகாரிகளுக்கு இது ஒரு பாடமாக இருக்கவேண்டும்.

இவ்வாறு அந்த பதிவில் அவர் கூறியுள்ளார்.

Next Story