மாவட்ட செய்திகள்

பா.ஜனதா மகளிர் அணி நிர்வாகிகளுடன் மோடி கலந்துரையாடல் + "||" + Modi discussions with Bjp women team executives

பா.ஜனதா மகளிர் அணி நிர்வாகிகளுடன் மோடி கலந்துரையாடல்

பா.ஜனதா மகளிர் அணி நிர்வாகிகளுடன் மோடி கலந்துரையாடல்
பா.ஜனதா மகளிர் அணி நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் நடத்திய பிரதமர் மோடி, எங்களுக்கு பெண்கள் தான் முதன்மையானவர்கள் என்று கூறினார்.
பெங்களூரு,

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி பிரதமர் மோடி கடந்த 1-ந் தேதி தேர்தல் பிரசாரத்தை கர்நாடகத்தில் தொடங்கினார். அன்று முதல் அவர் ஒரு நாள் விட்டு ஒரு நாள் கர்நாடகத்திற்கு வந்து பிரசாரத்தை மேற்கொண்டுவிட்டு செல்கிறார். அவர் நேற்று முன்தினம் கலபுரகி, பல்லாரி, பெங்களூரு ஆகிய நகரங்களில் நடைபெற்ற பிரசார கூட்டங்களில் பங்கேற்று பேசினார்.


அதே போல் பிரசாரம் மேற்கொள்ளாத நாட்களில் மோடி டெல்லியில் இருந்தபடி கர்நாடக பா.ஜனதா நிர்வாகிகளுடன் செல்போன் செயலி மூலம் கலந்துரையாடல் நடத்துகிறார். வேட்பாளர்கள், விவசாயிகளுடன் 2 நாட்கள் மோடி கலந்துரையாடினார். இந்த நிலையில் நேற்று டெல்லியில் இருந்தபடி பிரதமர் மோடி, பெங்களூரு மல்லேசுவரத்தில் உள்ள பா.ஜனதா கட்சி அலுவலகத்தில் கட்சியின் மகளிர் அணி நிர்வாகிகளுடன் செல்போன் செயலி மூலம் கலந்துரையாடல் நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது:-

இன்று நாடு பெண்கள் முன்னேற்றம் முதல் பெண்கள் தலைமையில் முன்னேற்றம் வரை முன்னேறி செல்கிறது. நாட்டின் வளர்ச்சிக்காக இதுபோன்ற வளர்ச்சி மந்திரங்கள் எங்களிடம் உள்ளன. எங்கள் கட்சி இந்த மந்திரங்களை நம்புகிறது. பா.ஜனதாவின் திட்டங்களில் பெண்கள் சக்தி மிக முக்கியமானது. எங்களை பொறுத்தவரையில் கட்சியாக இருந்தாலும் சரி, அரசாக இருந்தாலும் சரி எங்களுக்கு பெண்கள் தான் முதன்மையானவர்கள். பெண்களுக்கு தான் முதல் முன்னுரிமை வழங்குகிறோம்.

எனது மந்திரிசபையில் திறமையான பெண்கள் முக்கியமான இலாகாக்களை நிர்வகிக்கிறார்கள். ராணுவத்துறை மந்திரியாக நிர்மலா சீதாராமன், வெளியுறவுத்துறை மந்திரியாக உள்ள சுஷ்மா சுவராஜ். இருவரும் கர்நாடகத்துடன் தொடர்பு உடையவர்கள். நிர்மலா சீதாராமன் கர்நாடகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளார். சுஷ்மா சுவராஜ் 1999-ம் ஆண்டு பல்லாரியில் சோனியா காந்தியை தேர்தலில் எதிர்த்து போட்டியிட்டார்.

பூத் கமிட்டி மட்டத்தில் வெற்றி பெற பெண்கள் முயற்சி செய்ய வேண்டும். நாம் கர்நாடக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற வேண்டும். ஆனால் நான் எப்போதும் தொண்டர்களை கேட்டுக்கொள்வது போல் என்னை பொறுத்தவரையில் பூத் கமிட்டி மட்டத்தில் வெற்றி பெற வேண்டும் என்பது தான் முக்கியம். நாம் பூத் கமிட்டி மட்டத்தில் வெற்றி பெற்றால், தேர்தலில் நம்மை எந்த சக்தியாலும் தோற்கடிக்க முடியாது. வெற்றி எங்கே உள்ளது?. அது வாக்குச்சாவடியில் தான் உள்ளது. மற்றவை எல்லாம் நமது முயற்சி.

வாக்குச்சாவடி அளவில் நாம் வெற்றி பெற வேண்டுமென்றால், நாம் வாக்காளர்களின் வீடுகளுக்கு செல்ல வேண்டும். இந்த காங்கிரஸ் ஆட்சியின் தவறுகளை எடுத்துச் சொல்ல வேண்டும். இந்தியாவின் முன்னேற்றத்தில் ஒவ்வொருவரும் பங்கெடுக்குமாறு நீங்கள் எடுத்துச் சொல்லுங்கள். இந்த பணியை செய்வதில் பெண் தொண்டர்களின் பங்கு முக்கியமானது. இது தேர்தலில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும்.

பெண்கள் முன்னேற்றத்திற்கு மத்திய அரசு எதையும் செய்யவில்லை என்று காங்கிரஸ் சொல்கிறது. இதுபோன்ற பொய்யை சொல்லாவிட்டால் அந்த கட்சியின் வாகனம் எப்படி நகரும்?. காங்கிரசிடம் பொய்கள் மட்டுமே இருக்கின்றன. அந்த கட்சி மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டது. கடந்த காலங்களில் பெண்களின் முன்னேற்றத்திற்கு பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. ஆனால் அந்த திட்டங்கள் தொடர்ந்து செயல்படவில்லை.

பெண்கள் மீது நடைபெறும் அத்துமீறல் சம்பவங்களை தடுப்பதில் குடும்ப மதிப்பு, கலாசாரம், போலீஸ் செயல்பாடு ஆகியவை முக்கிய பங்காற்றும். சட்டத்தின் பயத்தை தவறு செய்பவர்கள் இடையே ஏற்படுத்த வேண்டியது அவசியம். அப்பாவி பெண் குழந்தைகளை கற்பழிப்பவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கும் சட்டத்தை மத்திய அரசு இயற்றியுள்ளது. ஒரு குறித்த காலத்திற்கு இந்த வழக்குகளின் விசாரணையை முடிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இதுபோன்ற குற்ற வழக்குகளை விசாரிக்க விரைவு கோர்ட்டுகள் அமைக்கப்படும்.

பெண் சிசுக்கொலை இந்த சமூகத்தின் சாபக்கேடு. வறுமையை ஒழிக்க “பேடி பச்சாவ், பாடி பதாவ்“ என்ற திட்டத்தை நாங்கள் தொடங்கியுள்ளோம். இந்த திட்டம் பாலின விகிதம் குறைவாக உள்ள பகுதிகளில் ஒரு சாதகமான சூழலை ஏற்படுத்தியுள்ளது. பெண்கள் யாராக இருந்தாலும் சரி அதாவது குடும்ப பெண்களாக இருந்தாலும் சரி, வேலைக்கு செல்பவராக இருந்தாலும் சரி, வேலையை கொடுப்பவராக இருந்தாலும் சரி அவர்களின் பக்கம் மத்திய அரசு உள்ளது.

சமூகம், பொருளாதாரம் மற்றும் இதர துறைகளில் பெண்கள் சமமான பங்கை ஆற்ற வேண்டும். ஒலிம்பிக் போட்டியாக இருந்தாலும் அல்லது காமன்வெல்த் போட்டியாக இருந்தாலும் இந்திய பெண்கள் நாட்டை பெருமை அடைய செய்கிறார்கள். ராணுவத்தில் பெண்கள் பணியாற்றுகிறார்கள். மத்திய அரசின் ஆளுகையில் உள்ள மாநிலங்களில் போலீஸ் துறையில் 33 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்க அரசு ஆலோசித்து வருகிறது. பெண்களை முன்னேற்ற எனது அரசும், பா.ஜனதாவும் முழுவதுமாக உறுதி பூண்டுள்ளது. புதிய இந்தியா திட்டத்தில் பெண்களின் பங்கு மிக முக்கியமானது.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.