கோடைகால புலிகள் கணக்கெடுப்பு: வால்பாறையில் வருகிற 21-ந்தேதி தொடங்குகிறது


கோடைகால புலிகள் கணக்கெடுப்பு: வால்பாறையில் வருகிற 21-ந்தேதி தொடங்குகிறது
x
தினத்தந்தி 5 May 2018 10:00 PM GMT (Updated: 5 May 2018 7:02 PM GMT)

வால்பாறையில் வருகிற 21-ந்தேதி முதல் கோடைகால புலிகள் கணக்கெடுப்பு பணி தொடங்கு கிறது. இதற்கு வனச்சரகர்களுக்கு பயிற்சி வகுப்பு நடந்தது.

வால்பாறை,

வால்பாறை ஆனைமலைபுலிகள் காப்பக அட்டகட்டி வனத்துறை பயிற்சி மையத்தில் கோடைகால புலிகள் கணக்கெடுப்பிற்கான 2 நாட்கள் பயிற்சி வகுப்பு நடந்தது. இதில் ஆனைமலை புலிகள்காப்பக கள இயக்குனர் கணேசன் தலைமை தாங்கி பேசும்போது கூறியதாவது:-

உலகத்தை வனத்துறை தான் உயிரோட்டத்துடன் தொடர்ந்து வைத்துக் கொண்டுவருகிறது. மற்ற துறைகளிலிருந்து வனத்துறை தனி சிறப்பு வாய்ந்தது. ஆகவே வனப்பகுதியில் உள்ள பல்வேறு வனவிலங்குகளையும், பூ பூக்கும் தாவரங்களையும் பாதுகாப்பதற்கு வன மேலாண்மையை தெரிந்துவைத்துக் கொள்ளவேண்டும். உங்களது வனத்துறை பணி சிறப்பாக அமைய வேண்டுமானால் உங்களது வனச்சரக பகுதிகளைப்பற்றியும், பீட் பகுதிகளையும் பற்றி முழுவதுமாக தெரிந்து வைத்துக் கொள்ளவேண்டும். இயற்கையோடு பேசுவதற்கும், இயற்கை சொல்வதை கேட்பதற்கும் பழகிக் கொண்டால் நீங்கள் பெரிய மனிதர்கள்.

இதற்காகத்தான் ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கட்டுப்பாட்டில் இந்த வனத்துறையின் பயிற்சி மையம் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. ஆனைமலை புலிகள் காப்பகம் ஒரு பல்கலைக்கழகமாக விளங்கி வருகிறது. 30 புலிகள், 600 யானைகள், 600 வரையாடுகள், 600 சிங்கவால்குரங்குகள் உட்பட பல்லுயிர் தன்மை கொண்டு ஆனை புலிகள் காப்பகம் விளங்கிவருகிறது. பல்வேறு வசதிகளை கொண்ட இந்த பயிற்சி மையத்தில் மேகமலை, கொடைக்கானல், ஸ்ரீவில்லிப்புத்தூர், திண்டுக்கல்,தேனி உள்ளிட்ட வனக் கோட்டங்களைச் சேர்ந்த 50 வனச்சரகர்கள், வனவர்கள், வனக்காவலர்களாகிய உங்களுக்கு புலிகள் கணக்கெடுப்பு குறித்து பயிற்சியளிக்கப்படுகிறது. இந்த முறை பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை கொண்டு கணக்கெடுக்கும்பணி நடைபெறுகிறது. இந்த பயிற்சியில் கலந்துகொண்ட நீங்கள் முழுமையான பயிற்சி பெற்று சென்று உங்களது வனக்கோட்டங்களில் துல்லியமாக கோடைகால புலிகள் கணக்கெடுப்பு பயிற்சியை செய்யவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பயிற்சி வகுப்புகளை விலங்கியலாளர்கள் ஆறுமுகம், பீட்டர், பயிற்சி மையத்தின் அறிவுரையாளர் ஓய்வு பெற்ற வனச்சரகர் தங்கராஜ் பன்னீர்செல்வம், மானாம்பள்ளி வனச்சரகர் சேகர், வால்பாறை வனச்சரகர் சக்திவேல் ஆகியோர் நடத்தினார்கள். நேற்று ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட உலாந்தி, பொள்ளாச்சி, மானாம்பள்ளி, வால்பாறை, உடுமலை, அமராவதி உள்ளிட்ட வனச்சரக பகுதிகளைச் சேர்்ந்த வனச்சரகர்கள், வனவர்கள், வனக்காவலர்கள் ஆகியோருக்கு பயிற்சியளிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து நவீன தொழில்நுட்பத்துடன் கணக்கெடுப்பு பணியை மேற்கொள்வதற்கு ஏற்றவாறு புதிய நவீன செல்போன் மற்றும் அதற்கான செயலியையும் கள இயக்குனர் கணேசன் அறிமுகம் செய்து வெளியிட்டார்.கோடை கால புலிகள் கணக்கெடுப்பு பணி வருகிற 21-ந் தேதியிலிருந்து 28-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை அட்டகட்டி வனத்துறை பயிற்சி மையத்தின் வனச்சரகர் கிருஷ்ணசாமி வனவர் நித்யா ஆகியோர் செய்திருந் தனர்.

Next Story