மத்திய அரசிடம் இருந்து நிதி பெற்று சுற்றுலா மேம்பாட்டுக்காக நடவடிக்கை எடுக்கப்படும், சுற்றுலாத்துறை அமைச்சர் பேட்டி


மத்திய அரசிடம் இருந்து நிதி பெற்று சுற்றுலா மேம்பாட்டுக்காக நடவடிக்கை எடுக்கப்படும், சுற்றுலாத்துறை அமைச்சர் பேட்டி
x
தினத்தந்தி 5 May 2018 10:30 PM GMT (Updated: 5 May 2018 7:14 PM GMT)

மத்திய அரசிடம் இருந்து நிதி பெற்று சுற்றுலா மேம்பாட்டுக்காக நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கூறினார்.

கோத்தகிரி,

கோடை விழாவின் முதல் நிகழ்ச்சியாக கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சி நேற்று தொடங்கியது. இவ்விழாவை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்த சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை இந்தியாவிலேயே தமிழகம் தான் சுற்றுலாத்துறையில் முதலிடம் வகித்து வருகிறது. ஊட்டி ஏரி அசுத்தமாக இருப்பதாக பல்வேறு புகார்கள் வந்து உள்ளன. இதையடுத்து, அந்த ஏரியை ஆய்வு செய்து உரிய முறையில் பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

நீலகிரி மாவட்டத்திற்கு நாளுக்கு நாள் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து உள்ளது. எனவே மத்திய அரசிடம் இருந்து நிதிபெற்று சுற்றுலா மேம்பாட்டுக்காக நடவடிக்கை எடுக்கப்படும்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான சாலைகள் புதுப்பிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த 2017-ம் ஆண்டு முதல் மாநில அரசு நிதியில் ரூ.91 கோடியே 95 லட்சம் செலவில் கைகாட்டி- மேலூர் ஒசஹட்டி சாலை புதுப்பிக்கப்பட்டு உள்ளது. சிறப்பு திட்ட நிதியில் 2013-14-ல் ரூ.2 கோடியே 25 லட்சம் செலவில் தொட்டபெட்டா சுற்றுலா தலமும், படகு இல்லத்தில் ஒளி விளக்கு அமைக்கும் பணி, பார்வையாளர் அரங்கம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

ஊட்டியில் ரூ.27 கோடி செலவில் பாதாள சாக்கடை திட்டம், மின் அலங்கார விளக்கு அமைக்கும் பணி நிறைவு பெற்று உள்ளது.

சுற்றுலா வளர்ச்சி நிதியில் 2017-18-ம் ஆண்டு ரூ.2 கோடியே 79 லட்சம் செலவில் முக்கிய சுற்றுலா தலங்களுக்கு செல்லும் சாலைகள் புதுப்பிக்கப்பட்டு உள்ளது. மேலும் ரூ.1 கோடியே 56 லட்சம் செலவில் தொட்டபெட்டா பகுதியில் பாதுகாப்பு தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டு உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story