போடி அருகே கால்வாயில் கலக்கும் கழிவுநீர்


போடி அருகே கால்வாயில் கலக்கும் கழிவுநீர்
x
தினத்தந்தி 5 May 2018 10:15 PM GMT (Updated: 5 May 2018 7:44 PM GMT)

போடி அருகே கால்வாயில் கழிவுநீர் கலப்பதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது.

போடி

போடி அருகே மேலசொக்கநாதபுரம், மீனாட்சிபுரம் பேரூராட்சிகள் அடுத்தடுத்து இருக்கின்றன. இந்த 2 பேரூராட்சிகளிலும் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். மீனாட்சிபுரத்தில் 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட மீனாட்சியம்மன் கண்மாய் இருக்கிறது.

இந்த கண்மாயில் தேங்கும் தண்ணீர் மூலம், 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்களில் நெல் சாகுபடி செய்யப்படுகின்றன. இதுதவிர தென்னை, காய்கறிகள், வெற்றிலை கொடிகளும் சாகுபடி செய்யப்படுகின்றன. இந்த கண்மாய்க்கு போடி சாலைகாளியம்மன்கோவில் அருகே கொட்டக்குடி ஆற்றிலில் இருந்து பிரியும் கால்வாயில் மூலம் திருமலாபுரம், மேலசொக்கநாதபுரம் பேரூராட்சி வழியாக தண்ணீர் வந்து சேருகிறது.

இந்தநிலையில் சமீப காலமாக பேரூராட்சி பகுதிகளில் வெளியேறுகிற ஒட்டு மொத்த கழிவுநீரும், இந்த கால்வாயில் கலக்க விடப்படுகிறது. கழிவுகள் குப்பைகள் கலந்து வருவதால் துர்நாற்றம் வீசுகிறது. ரசாயன கழிவுகளும் கலப்பதால் நுரை பொங்கிய நிலை காணப்படுகிறது.

இந்த கால்வாய் நீரை பயன்படுத்தினால் பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கால்வாயில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

Next Story