போலி ஏ.டி.எம். கார்டு தயாரித்து மோசடி: என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகருக்கு தொடர்பு


போலி ஏ.டி.எம். கார்டு தயாரித்து மோசடி: என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகருக்கு தொடர்பு
x
தினத்தந்தி 5 May 2018 10:00 PM GMT (Updated: 5 May 2018 8:24 PM GMT)

போலி ஏ.டி.எம். கார்டு தயாரித்து மோசடி செய்த விவகாரத்தில் என்.ஆர். காங்கிரஸ் பிரமுகருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

புதுச்சேரி,

புதுவையில் சமீப காலமாக மற்றவர்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து மோசடி செய்யப்படுவதாக போலீசில் தொடர்ந்து புகார்கள் தெரிவிக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். இதுதொடர்பாக சி.ஐ.டி. போலீசார் கண்காணித்து நடவடிக்கை மேற்கொண்டதில் சுவைப்பிங் மெஷின் மூலம் ரகசிய தகவல்களை பெற்று போலி ஏ.டி.எம். கார்டு தயாரித்து பலரது வங்கி கணக்கில் மோசடி செய்தவர்களை அடையாளம் கண்டுபிடித்தனர்.

இதில் தொடர்புடைய லாஸ்பேட்டை லட்சுமிநகர் பாலாஜி (வயது 26), முருங்கப்பாக்கம் சந்துரு (30), கடலூர் காராமணிக்குப்பம் கமல் (28), சென்னை கொளத்தூர் ஷியாம் (27) அரசு டாக்டர் விவேக் என்ற விவேக் ஆனந்தன்(28) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களிடம் விசாரித்ததில், புதுச்சேரியில் மட்டுமல்லாது. விழுப்புரம், கடலூர், திண்டிவனம் மற்றும் பல்வேறு இடங்களில் இதுபோல் வங்கி கணக்குகளில் மோசடி செய்து இருப்பதும், புதுச்சேரியை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் உள்ளிட்ட முக்கிய புள்ளிகளுக்கு தொடர்பு இருப்பதும் தெரியவந்தது. சர்வதேச கும்பலுடன் தொடர்பு இருப்பதும் அம்பலமானது.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான கேரளாவை சேர்ந்த ரமீஷ் அங்கு ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு கோழிக்கோடு சிறையில் அடைக்கப்பட்டார். அவரை காவலில் எடுத்து புதுவைக்கு கொண்டு வந்து விசாரிக்க சி.ஐ.டி. போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

இதற்கிடையே இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட பாலாஜி, சந்துரு ஆகிய 2 பேரையும் போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அவர்களது வீடுகள் மற்றும் உறவினர்களின் வீடுகளுக்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர்.

இதில் முதலியார்பேட்டை பகுதியை சேர்ந்த என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர், ரெட்டியார்பாளையத்தை சேர்ந்த கல்வி நிறுவன அதிபர் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள். இந்த விவகாரத்தில் அரசியல் புள்ளிகள் சிக்கி வருவது அடுத்தடுத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த மோசடியில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் அ.தி.மு.க. பிரமுகர் சந்துருஜி பிடிபட்டால் மேலும் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று தெரிகிறது. 5 தனிப்படைகள் அமைத்து போலீசார் அவரை தேடி வருகின்றனர். அவரது செல்போனை கண்காணித்ததில் ஐதாராபாத், பெங்களூரு என குறிப்பிடுவதால் அந்த மாநிலங்களில் பதுங்கி இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். இதை வைத்து அவரை கைது செய்ய தனிப்படை போலீசார் அந்த பகுதிக்கு விரைந்துள்ளனர்.

Next Story