வணிகர் தினத்தை முன்னிட்டு கடையடைப்பு


வணிகர் தினத்தை முன்னிட்டு  கடையடைப்பு
x
தினத்தந்தி 5 May 2018 10:30 PM GMT (Updated: 5 May 2018 9:10 PM GMT)

வணிகர் தினத்தை முன்னிட்டு கோவில்பட்டி, ஏரலில் கடையடைப்பு நடந்தது.

கோவில்பட்டி

சென்னையில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில், மாநில மாநாடு நேற்று நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக நேற்று முன்தினம் கோவில்பட்டியில் இருந்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தூத்துக்குடி மண்டல தலைவர் ராதாகிருஷ்ணன், வடக்கு மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம் தலைமையில், 100-க்கு மேற்பட்ட வாகனங்களில் ஏராளமான வணிகர்கள் தங்களுடைய குடும்பத்தினருடன் புறப்பட்டு சென்றனர்.

இதையொட்டி கோவில்பட்டியில் நேற்று கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. கோவில்பட்டி மெயின் ரோடு, தெற்கு பஜார், தினசரி மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் அனைத்து கடைகளும் மூடிக் கிடந்ததால் வெறிச்சோடி காணப்பட்டது.

இதேபோன்று ஏரலிலும் கடையடைப்பு நடந்தது. ஏரல் மெயின் பஜார், மெயின் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் அனைத்து கடைகளும் மூடிக் கிடந்தன. மெஞ்ஞானபுரத்திலும் முழு கடையடைப்பு நடந்தது.

திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், உடன்குடி, எட்டயபுரம், விளாத்திகுளம், கயத்தாறு, கழுகுமலை உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பாலான கடைகள் திறந்து இருந்தன.

Next Story