கிராம சுயாட்சி இயக்க நிறைவு நாளையொட்டி நலத்திட்ட உதவிகள் கலெக்டர் வழங்கினார்


கிராம சுயாட்சி இயக்க நிறைவு நாளையொட்டி நலத்திட்ட உதவிகள் கலெக்டர் வழங்கினார்
x
தினத்தந்தி 6 May 2018 4:15 AM IST (Updated: 6 May 2018 2:42 AM IST)
t-max-icont-min-icon

கிராம சுயாட்சி இயக்க நிறைவு நாளையொட்டி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் அன்பழகன் வழங்கினார்.

கரூர்,

கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் அனைத்து வசதிகளும் கிடைக்க பெற செய்யும் வகையில் ஊரக வளர்ச்சி முகமை திட்டத்தின் கீழ் கிராம சுயாட்சி இயக்கத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டு 8 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டன. மேலும் அரசின் திட்டங்கள், மானியங்கள் உள்ளிட்டவற்றை எளிதில் பெற்று சுயாட்சி பெறுவது தொடர்பான கடந்த மாதம் 14-ந் தேதி முதல் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் அந்தந்த கிராமங்களில் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கரூர் ஊராட்சி ஒன்றியம் நெரூர் வடபாகம் கிராமத்தில் நேற்று நடைபெற்ற கிராம சுயாட்சி இயக்க நிறைவு நாள் விழாவில் மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கி, தொழில் பயிற்சி முடித்தவர்களுக்கு அதற்கான சான்றிதழை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

கிராம சுயாட்சி இயக்க நிறைவு நாளையொட்டி நெரூர் வடக்கு ஊராட்சியில் மகளிர் திட்டம் மற்றும் வங்கிகள் மூலம் அனைவருக்கும் காப்பீடு திட்டத்துடன் கூடிய வங்கி கணக்குகள் தொடங்குதல், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குதல், வேலைவாய்ப்பு உத்தரவுகள் வழங்கப்பட்டன. இந்த கிராம சுயாட்சி இயக்க திட்டத்தின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்து பொதுமக்கள் நன்கு தெரிந்து கொண்டு இத்திட்டங்கள் மூலம் பயன்பெற வேண்டும். மேலும் பொதுமக்கள் வங்கிகளில் ரூ.12 செலுத்தி ரூ.2 லட்சத்திற்கான விபத்து காப்பீட்டையும், ரூ.330 செலுத்தி ரூ.2 லட்சத்திற்கான ஆயுள் காப்பீட்டையும் பெற முன்வர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியின் போது, 27 நபர்களுக்கு ரூ.32 லட்சம் மதிப்பில் தொழில்கடன் வழங்கப்பட்டது. 28 நபர்களுக்கு 10 நாட்களுக்கு மசாலா பவுடர், ஊறுகாய், அப்பளம் தயார் செய்வதற்கு ஊரக சுய தொழில் முனைவோர் பயிற்சி மையம் மூலம் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. மகளிர் திட்டம் மூலம் 30 நபர்களுக்கு தையல் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. 5 நபர்களுக்கு ரூபே வங்கி கணக்கு பிரதம மந்திரி தன்ஜன் யோஜனா வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணராயபுரம் தொகுதி எம்.எல்.ஏ. கீதா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா, மத்திய அரசின் வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் நலத்துறை சார்பு செயலர் சவுந்தரராஜன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ரவிச்சந்திரன், ஊராட்சிகளின் உதவி இயக்குனர் தியாகராஜன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் பாலசுப்பிரமணியம், மகளிர் திட்ட இயக்குனர் சுப்பிரமணியம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story