கோடை விடுமுறையில் ஆம்னி பஸ்களில் கட்டண கொள்ளை


கோடை விடுமுறையில் ஆம்னி பஸ்களில் கட்டண கொள்ளை
x
தினத்தந்தி 5 May 2018 10:55 PM GMT (Updated: 5 May 2018 10:55 PM GMT)

சென்னை கோயம்பேடு, பயணிகள் போக்குவரத்தில் ஆம்னி சொகுசு பஸ்கள் முக்கிய பங்கு வகித்து வருகிறது. இங்கு பெரிய, சிறிய டிராவல்ஸ் நிறுவனங்களின் 250 அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.

கோயம்பேடு,

கோயம்பேட்டில் இருந்து தமிழ்நாடு மட்டுமின்றி, ஆந்திரா, கேரளா, கர்நாடகா மாநிலங்களுக்கும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. சாதாரண வேலை நாட்களில் ஒரு நாளைக்கு பகல், இரவு என்று 400 பஸ்களும், விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் 700 பஸ்கள் வரையிலும் இயக்கப்படுகிறது.

அதன் மூலம் சுமார் தினமும் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பயணம் செய்கிறார்கள். அந்தந்த டிராவல்ஸ் நிறுவனங்களில், இணையதளம், தொலைபேசி அல்லது நேரில் சென்று முன்பதிவு செய்யும் முறை பின்பற்றப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலிப்பதாக அடிக்கடி செய்திதாள்களிலும், ஊடகங்களிலும் செய்தி வெளிவருவது வழக்கமான ஒன்றாகிவிட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆம்னி பஸ் நிலையத்தில், டிக்கெட் அதிக விலைக்கு விற்ற தரகர்கள் கைது என்று செய்தி வெளியானது.

டிராவல்ஸ் நிறுவனங்களில், இணையதளம், தொலைபேசி அல்லது நேரில் சென்று முன்பதிவு செய்யும் முறை பின்பற்றப்படும்போது தரகர்கள் எப்படி டிக்கெட்டை அதிக விலைக்கு விற்கமுடியும் என்ற கேள்வி எழுகிறது. இதுபற்றி விசாரித்தால் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வருகின்றன.தற்போது, பஸ் டிக்கெட் முன்பதிவு செய்ய டிராவல்ஸ் நிறுவனங்கள் சாராத இணையதளங்கள் ஏராளமாக உள்ளன.

இந்த இணையதளங்கள் பெரிய, சிறிய என்று அனைத்து டிராவல்ஸ்களையும் ஒருங்கிணைத்து ஆன்லைன் மூலம் டிக்கெட் புக்கிங் செய்யும் வசதியை ஏற்படுத்தி உள்ளன.

ரூ.10 ஆயிரம் முன்பணம் செலுத்தினால், அங்கீகாரம் இல்லாத நபர்களுக்கும் சார் முன்பதிவு அனுமதி, அதாவது துணை ஏஜெண்டு என அங்கீகாரம் கொடுத்து அவர்களுக்கு பயன்பாட்டு பெயர் மற்றும் கடவுச் சொல் ஆகியவற்றை தந்து விடுகிறார்கள்.

இதனால், விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில், முக்கிய ஊர்களுக்கு குறிப்பாக வெளிமாநிலகளுக்கு டிக்கெட்டுகளை தங்கள் விருப்பத்திற்கு முன்பதிவு செய்யும் அங்கீகாரம் இல்லாத துணை ஏஜெண்டுகள், டிக்கெட் பதிவு செய்ய முடியாத நிலையில் அவசரமாக வரும் பயணிகளிடம், தாங்கள் முன்பதிவு செய்த ஆன்லைன் டிக்கெட்டை விற்க அநியாய கட்டணம் கேட்டு அடாவடி செய்கின்றனர். கடைசி நேரத்தில் வேறு வழியின்றி அந்த டிக்கெட்டை வாங்கி பயணம் செய்யும் நிலைக்கு பயணிகள் தள்ளப்படுகிறார்கள்.

மேலும், அத்துமீறும் துணை ஏஜெண்டுகள், இணையதளத்தில், தங்கள் கைபேசி எண்ணை பதிவிட்டு, செல்லும் ஊர் பெயர், பஸ் நிற்கும் இடம், மெட்ரோ ரெயில் பில்லர் எண் குறிப்பிடப்பட்டு அதன் மூலம் புக்கிங் செய்கிறார்கள். இவர்களின் கூட்டாளிகள் தாம்பரம், பெருங்களத்தூர் ஆகிய பஸ் நிறுத்தங்களிலும் செயல்படுகின்றனர்.

கோடை விடுமுறை, தொடர் விடுமுறை, பண்டிகை நாட்களில், துணை ஏஜெண்டுகளாக செயல்படும் தரகர்கள் ஆந்திரா, கர்நாடகா மாநில சொகுசு பஸ்களை வாடகைக்கு அமர்த்தி, தங்களுக்கு கிடைத்த சாலையோர இடங்களை தற்காலிக அலுவலகமாக மாற்றி ஒரே நாளில் கொள்ளை லாபம் அடிக்கிறார்கள்.

இதுபோன்று உத்தரவாதம் இல்லாமல் செல்லும் பஸ்கள் விபத்தில் சிக்கினாலோ, நடுவழியில் கோளாறு ஏற்பட்டு நின்றாலோ, யார் பொறுப்பேற்பது என்ற மிகப்பெரிய கேள்வி எழுகிறது. இதற்கு போக்குவரத்து துறை அதிகாரிகள்தான் பதில் சொல்லும் நிலையில் உள்ளனர். முறையான அங்கீகாரத்துடன் டிராவல்ஸ் நிறுவனங்கள் நடத்துபவர்களிடம் இதுகுறித்து கேட்டபோது அவர்கள் கூறியதாவது.

ஆரம்பத்தில் எழும்பூர் பகுதியிலிருந்து வந்த 40 தரகர்கள் மட்டுமே இங்கு இருந்தார்கள். ஆனால் டிக்கெட் புக்கிங் இணையதளங்கள் துணை ஏஜெண்டுகள் வழியாக அனுமதி கொடுக்க தொடங்கியது முதல் தற்போது 300-க்கும் மேற்பட்ட தரகர்கள் கோயம்பேட்டில் குவிந்து விட்டனர். அவர்களில் பலர் குற்ற பின்னணி உள்ளவர்கள்.

இதுபோன்ற தரகர்கள் பதிவு செய்து தரும் டிக்கெட் மூலம் இரவு நேரத்தில் தனியாக பஸ்சில் பயணம் செய்யும் ஆண்கள் மது அருந்தி இருந்தால், அவர்களை மிரட்டி, பணம், நகை, செல்போன்கள் பறிக்கும் சம்பவங்களும் அடிக்கடி நடக்கிறது.

ஆம்னி பஸ் நிறுத்தத்திற்கு வெளியே அங்கீகாரம் இல்லாத தரகர்கள் செய்யும் கட்டண கொள்ளையால், முறைப்படி செயல்படும் எங்களுக்கு கெட்ட பெயர் ஏற்படுகிறது. தரகர்களை கட்டுப்படுத்த வேண்டிய போலீசாரில் சிலர் அவர்களுக்கு உடந்தையாக உள்ளனர் என்பது வேதனை தரும் விஷயம்.

துணை ஏஜெண்டு அனுமதி அளிக்கும் டிக்கெட் பதிவு இணையதளங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கவேண்டும். அடாவடி இடைத் தரகர்களை முற்றிலும் ஒழிக்கவேண்டும். விதிமுறைகளுடன் செயல்படும் ஆம்னி பஸ் அதிபர்கள் இணைந்து டிக்கெட் புக்கிங் இணையதளத்தை உருவாக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story