மாவட்ட செய்திகள்

அடிப்படை வசதிகள் இல்லாமல் செயல்படும் ஆவடி ரெயில் நிலையம் + "||" + Operate without basic facilities Avadi Railway Station

அடிப்படை வசதிகள் இல்லாமல் செயல்படும் ஆவடி ரெயில் நிலையம்

அடிப்படை வசதிகள் இல்லாமல் செயல்படும் ஆவடி ரெயில் நிலையம்
அடிப்படை வசதிகள் இல்லாமல் செயல்படும் ஆவடி ரெயில் நிலையத்தில் வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ரெயில் நிலையத்தின் சுதந்திரமாக உலா வரும் நாய்களால் பயணிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
ஆவடி,

சென்னையை அடுத்துள்ள ஆவடி புறநகரின் முக்கியத்துவம் மிகுந்த பகுதியாக விளங்கி வருகிறது. ஆவடியில் ராணுவத்துக்கு சொந்தமான நிறுவனங்கள், பல்வேறு அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், கல்லூரிகள், பள்ளிகள் உள்ளிட்டவை அமைந்துள்ளது. பல்வேறு தொழிற்சாலைகளும் உள்ளன.


இங்கு பணிபுரியும் ஊழியர்கள், மாணவ-மாணவியர் மற்றும் அலுவலக வேலை காரணமாக வெளியூர்களுக்கு செல்லும் ஏராளமான பொதுமக்கள் ஆவடி ரெயில் நிலையம் வந்து செல்கின்றனர். முக்கியத்துவம் வாய்ந்த ஆவடி ரெயில் நிலையம் அடிப்படை வசதிகள் இன்றி அமைந்துள்ளது.

பயணிகள் வந்து செல்லும் ரெயில் நிலையத்தில் பல மாதங்களாக நாய்களின் தொல்லை அதிகமாக இருக்கின்றன. டிக்கெட் கவுண்ட்டர், பயணிகள் அமரும் நடைமேடை, நடை மேம்பாலம், டிக்கெட் பரிசோதகர் இருக்கும் அறையின் அருகே, ரெயில்வே மேலாளர் இருக்கும் அலுவலகம் அருகில், ரெயில்வே போலீஸ் நிலையம் அருகே என ரெயில் நிலையத்தின் அனைத்து இடங்களிலும் வெறி நாய்கள் சுதந்திரமாக உலா வருகின்றன.

ரெயில் நிலையத்தின் பல இடங்களில் நாய்கள் படுத்திருக்கின்றன. சில நேரங்களில் நாய்கள் பொதுமக்களை விரட்டி கடிப்பதாக தெரிகிறது. ரெயில் பிளாட்பாரத்துக்குள் வரும்போது சில நேரங்களில் பயணிகள் ஏற செல்லும் போது நாய்கள் குறுக்கே வந்து மோதுவதால் பயணிகள் தடுக்கி கீழே விழுகின்றனர்.

இந்த நாய்களால் ரெயில் நிலையத்துக்கு வரும் பயணிகள் என அனைத்து தரப்பினரும் அச்சம் அடைந்துள்ளனர். இதுகுறித்து ஆவடி நகராட்சி அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் நகராட்சி அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று ரெயில்வே அதிகாரிகள் கூறுகின்றனர்.

மேலும் ரெயில் நிலையத்தில் பொதுமக்கள் வசதிக்காக வைக்கப்பட்டிருக்கும் குடிநீர் தொட்டி பராமரிக்கப்படாமல் உள்ளது. அதில் இருந்து வீணாகும் நீர் அங்கு தேங்கி கொசுக்கள் உற்பத்தி நிலையமாக மாறி உள்ளது. அந்த குடிநீர் தொட்டியில் உள்ள தண்ணீர் கடும் துர்நாற்றம் வீசுவதோடு குடிக்க பயனற்றதாக காணப்படுகிறது.

பொதுமக்கள் வசதிக்காக ரெயில்வே போலீஸ் நிலையம் அருகே பயணிகள் ஓய்வு அறை ஒன்று பல லட்சம் செலவில் பல மாதங்கள் முன்பு கட்டப்பட்டது. ஆனால் இந்நாள் வரையிலும் புதியதாக கட்டப்பட்ட ஓய்வு அறை திறக்கப்படாமல் ஓய்வு எடுத்து வருகிறது.

ரெயில் நிலையத்தின் டிக்கெட் கவுண்ட்டர் அருகே பல ஆண்டுகளாக பாழடைந்த நிலையில் கிணறு உள்ளது. அதன் மேல் இரும்பு கம்பிகளை வைத்துள்ளனர். அதில் இருக்கும் தண்ணீர் சுகாதாரமற்ற முறையில் இருக்கிறது. அங்கு இருந்துதான் நடைமேடையில் இருக்கும் குழாய்கள் மற்றும் ரெயில்வே போலீஸ் நிலையம் ஆகியவற்றிற்கு செல்கிறது.

அந்த தண்ணீர் சாதாரண பயன்பாட்டிற்கே ஏற்ற நிலையில் இல்லை என்று கூறப்படுகிறது. மேலும் யாராவது கிணறு இருக்கும் வழியாக சென்றால் தவறி கிணற்றில் விழுந்து விடும் அபாயம் உள்ளது. அவற்றை முறையாக மூடி பாதுகாக்க ரெயில்வே அதிகாரிகள் முயற்சிக்கவில்லை என்று குற்றம் சாட்டப்படுகிறது.

எனவே தினந்தோறும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்லும் ஆவடி ரெயில் நிலையத்தில் உலா வரும் ஆபத்தான நாய்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கட்டி முடிக்கப்பட்டும் பொதுமக்களுக்கு பயன் தராமல் ஓய்வு எடுத்தும் ஓய்வு அறையை உடனடியாக திறக்க வேண்டும் எனவும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்களின் பாதுகாப்பு நலன் கருதி குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் ஆவடி ரெயில் நிலையத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட வேண்டும் என்றும் அவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை வலியுறுத்தி வருகின்றனர்.