வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.1 கோடி மோசடி வாலிபர் கைது


வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.1 கோடி மோசடி வாலிபர் கைது
x
தினத்தந்தி 6 May 2018 4:37 AM IST (Updated: 6 May 2018 4:37 AM IST)
t-max-icont-min-icon

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.1 கோடி வரை மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்

பூந்தமல்லி,

சென்னை ஜாபர்கான்பேட்டை, கங்கா காலனியை சேர்ந்தவர் இம்ரான் ஷா(வயது 25). படித்த இளைஞர்களை கனடாவுக்கு வேலைக்கு அழைத்துச்செல்லும் நிறுவனத்தை வளசரவாக்கம், ராதா அவென்யூ பகுதியில் நடத்தி வந்தார். இது குறித்து ஆன்-லைனில் விளம்பரம் செய்திருந்தார்.

இதனை பார்த்த சிலர் கனடாவுக்கு வேலைக்கு செல்ல விருப்பம் தெரிவித்து, இம்ரான் ஷா அலுவலகத்துக்கு சென்று ஆவணங்களை கொடுத்தனர். அதற்கான கட்டணமாக ஒவ்வொருவரிடமும் தலா ரூ.2½ லட்சம் வசூல் செய்துள்ளார். இவ்வாறு 15-க்கும் மேற்பட்டோரிடம் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி பணம் வசூல் செய்துள்ளார்.

ஆனால் இதுவரையிலும் அவர் யாரையும் வேலைக்காக வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கவில்லை. இதனால் அவரிடம் பணத்தை கொடுத்தவர்கள் இதுபற்றி கேட்டனர். அதற்கு அவர், விரைவில் வெளிநாட்டு வேலைக்கு அனுப்பி வைத்து விடுவதாக கூறினார்.

இந்தநிலையில் இம்ரான் ஷா திடீரென தனது அலுவலகத்தை மூடி விட்டு தலைமறைவாகி விட்டார். இதனால் வேலைக்காக அவரிடம் பணத்தை கொடுத்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். பாதிக்கப்பட்டவர்கள் இதுபற்றி வளசரவாக்கம் போலீசில் புகார் அளித்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து உதவி கமிஷனர் சம்பத், இன்ஸ்பெக்டர் அமுதா, சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராம் ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைத்து தலைமறைவான இம்ரான் ஷாவை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்தநிலையில் போலீசாரிடம் சிக்காமல் கடந்த ஒரு வருடமாக தலைமறைவாக இருந்து வந்த இம்ரான் ஷாவை மதுரையில் பதுங்கி இருந்தபோது போலீசார் மடக்கி பிடித்தனர். பின்னர் அவரை போலீஸ் நிலையம் கொண்டு வந்து விசாரணை செய்தனர்.

அதில் அவர், இதேபோல் பல்வேறு இடங்களில் அலுவலகம் நடத்தி கனடா நாட்டுக்கு வேலைக்கு அனுப்பி வைப்பதாக கூறி சுமார் ரூ.1 கோடி வரை பணம் மோசடி செய்து இருப்பது தெரிந்தது. இதையடுத்து இம்ரான் ஷாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

Next Story