கர்நாடக தேர்தல் விளையாட்டிற்கு தமிழகம் பகடைகாயாக பயன்படுத்தப்படுகிறது - ஜி.கே.வாசன் பேட்டி


கர்நாடக தேர்தல் விளையாட்டிற்கு தமிழகம் பகடைகாயாக  பயன்படுத்தப்படுகிறது - ஜி.கே.வாசன் பேட்டி
x
தினத்தந்தி 7 May 2018 5:15 AM IST (Updated: 7 May 2018 12:38 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடக தேர்தல் விளையாட்டிற்கு தமிழகம் பகடைகாயாக பயன்படுத்தப்படுகிறது என்று ஜி.கே.வாசன் பேட்டி அளித்தார்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரத்தில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் நிருபர்களிடம் கூறியதாவது:- நீட் தேர்வு மையங்கள் வெளிமாநிலங்களில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள குழப்பத்திற்கு மத்திய அரசின் சி.பி.எஸ்.இ. நிர்வாக திறமையின்மையே காரணம். மாணவர்கள் நீட் தேர்விற்காக அலைக்கழிக்கப்படுவது ஏற்புடையது அல்ல. நீட் தேர்வை வெளிமாநிலங்களில் எழுதுபவர்களின் எண்ணிக்கையை மாநில அரசு வெளியிட தயக்கம் காட்டுகிறது. இதற்கு என்ன காரணம். தமிழக மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை குறைக்க சதி நடப்பதாக பெற்றோர்களே அச்சம் அடைந்துள்ளனர்.

வெளிமாநிலங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுஉள்ளதால் மாணவர்கள் மன அழுதத்திற்கு உள்ளாகி உள்ளனர். இந்த பிரச்சினை மட்டுமல்ல எந்த விஷயத்திலும் மத்திய அரசை மாநில அரசு கட்டாயப்படுத்துவது இல்லை. இதனால் மக்களுக்கு அரசின் மீது நம்பிக்கை இழக்கும் சூழல் உருவாகி உள்ளது. தேர்விற்கு செல்லும் மாணவர்களுக்கு அரசு செய்ய வேண்டிய வேலையை தனியார் அமைப்புகள் செய்யும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. தேர்வு மைய விஷயத்தில் யார் தவறு செய்திருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மத்திய அரசின் திறமையின்மைக்கு இது ஒரு எடுத்துக்காட்டு. நீட் தேர்வில் விலக்கு பெற்றுத்தராத போதிலும் வெளிமாநில மையங்களை ஒதுக்கீடு செய்ததையாவது மாநில அரசு தடுத்திருக்கலாம். மத்திய அரசு சொல்வதற்கு எல்லாம் மாநில அரசு தலை ஆட்டுவதை ஏற்க முடியாது. தமிழக அரசின் பலவீனமே இதற்கு காரணம். தமிழக மக்கள் மீது திணிக்கப்படும் எந்த திட்டங்களையும் இந்த மக்கள் ஏற்க மாட்டார்கள்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் ரேஷன் அரிசி வினியோகத்தில் முறைகேடு நடப்பதாக புகார் தெரிவித்துள்ளனர். இதில் அரசு உரிய நடவடிக்கை எடுத்து அத்தியாவசிய பொருட்கள் முறையாக கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் ஜி.எஸ்.டி. வரியில் இருந்து விலக்களிக்க வேண்டும். மக்களின் சங்கடங்களை தெரிந்தும் தெரியாமலும், புரிந்தும் புரியாமலும் இந்த அரசு செயல்பட்டு கொண்டிருக்கிறது. இதனால், தமிழக வளர்ச்சி தடைபடுகிறது. காவிரி மேலாண்மை வாரிய பிரச்சினையில் கோர்ட்டு உத்தரவை மத்திய அரசும், மாநில அரசும் மதிக்கவில்லை. ஜனநாயக நாடான இந்தியாவில் சட்டத்திற்கு உட்பட்டு அரசு நடக்கிறதா என்பது சந்தேகமாக உள்ளது. கர்நாடக தேர்தல் விளையாட்டிற்கு தமிழகம் பகடைகாயாக பயன்படுத்தப்படுகிறது.

வரும் காலங்களில் தேசிய கட்சிகளை மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள். தேர்தலில் எந்த கட்சியானாலும் தமிழகத்தில் கூட்டணி அமைத்துதான் ஆட்சி அமைக்க முடியும். அனைத்து கட்சிக்கும் கூட்டணி அவசியமாகும். பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் குறிப்பிட்ட காலத்திற்குள் உண்மை நிலை வெளிவர வேண்டும். இதில் தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். குட்கா விவகாரத்தில் அரசியல் தலையீடோ, அதிகாரிகள் தலையீடோ இல்லாமல் உண்மை வெளிச்சத்திற்கு வர வேண்டும். எஸ்.வி.சேகர் கைது தொடர்பான சர்ச்சை விவகாரத்தில் தமிழக அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். அப்போது மாவட்ட தலைவர் ரவிச்சந்திரராமவன்னி, மாவட்ட செயலாளர் முனியசாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராம்பிரபு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Next Story