ராஜபாளையத்தில் குடிநீர் திட்டப்பணிகள் மணல் தட்டுப்பாட்டால் பாதிப்பு


ராஜபாளையத்தில் குடிநீர் திட்டப்பணிகள் மணல் தட்டுப்பாட்டால் பாதிப்பு
x
தினத்தந்தி 6 May 2018 10:00 PM GMT (Updated: 6 May 2018 7:08 PM GMT)

ராஜபாளையத்தில் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள் மணல் தட்டுப்பாட்டால் பாதிப்படைந்துள்ளன,

ராஜபாளையம்,

ராஜபாளையம், சிவகாசி, திருத்தங்கல் நகராட்சிகளில் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் ரூ.404.04 கோடியில் புதிய தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தாமிரபரணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைத்து அங்கிருந்து கிணறுகளின் மூலமாக சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு வரப்படுகிறது. குழாய் மூலம் மானூருக்கு கொண்டு வரப் படுவதோடு அங்கிருந்து பனவடலிசத்திரம், சங்கரன்கோவிலில் தொட்டிகளில் சேகரிக்கப்பட்டு பின்னர் விருது நகர் மாவட்டத்துக்கு குடிநீர் வரும்.

இந்த திட்டத்தின் மூலம் 3 நகராட்சிகளிலும் நபர் ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு 135 லிட்டர் தண்ணீர் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ராஜபாளையத்தை பொறுத்தவரை சங்கரன் கோவிலில் அமைக்கப்படும் பொது நீர் சேகரிப்பு நிலையத்தில் இருந்து குழாய் மூலம் தண்ணீர் கொண்டு வந்து சேகரிக்கப்படுகிறது. 3 பிரிவு நீரேற்று குழாய்கள் மற்றும் 3 தனித்தனி நீர் இறைப்பான் மூலம் நகரத்திலுள்ள 14 உயர் நீர்த்தேக்க தொட்டிகளில் தண்ணீர் ஏற்றப்படும். இதற்காக ஏற்கனவே 4 தொட்டிகள் உள்ளன. 9 தொட்டிகள் புதிதாக கட்டப்படுகிறது.

இந்த திட்டத்துக்கு கடந்த பிப்ரவரி மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது. பணிகள் அன்று முதலே தீவிரமாக நடந்தன. சங்கரன்கோவிலில் இருந்து தண்ணீர் கொண்டுவர முதற்கட்டமாக குழாய்கள் கொண்டு வரப்பட்டு சாலையோரம் போடப்பட்டுள்ளன.

ராஜபாளையம் ரெயில்வேகேட் அருகே தாய்சேய்நல விடுதி அமைந்துள்ள இடத்தில் தொட்டிக்கான கட்டுமான பணிகள் தொடங்கின. ஆனால் தற்போது நிலவும் மணல் தட்டுப்பாட்டால் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. ஆற்று மணலுக்கு பதிலாக எம்-சாண்ட் பயன்படுத்த முடிவு செய்துள்ளனர். எனினும் அந்தப்பகுதியில் கிடைக்கும் அந்த வகையான மணல் தரமானதுதானா என கண்டறிய ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆய்வு அறிக்கை கிடைத்த பின்னரே பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராஜபாளையம் நகரில் இந்த திட்டத்தின் மூலம்38,586 வீட்டு இணைப்பு வழங்க முடிவு செய்து பணிகள் தொடங்கிய நிலையில் மணல் தட்டுப்பாட்டால் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் இதில் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த காலத்துக்குள் பணிகள் முடிக்காத நிலையில் கூடுதல் செலவு ஏற்படும் என்பதை கருத்தில்கொண்டும் செயல்பட கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

Next Story