‘நீட்’ தேர்வுக்கு விலக்கு கோரி தொடர் போராட்டங்கள் நடத்த வேண்டும்: தி.க. மகளிர் மாநாட்டில் கி.வீரமணி பேச்சு


‘நீட்’ தேர்வுக்கு விலக்கு கோரி தொடர் போராட்டங்கள் நடத்த வேண்டும்: தி.க. மகளிர் மாநாட்டில் கி.வீரமணி பேச்சு
x
தினத்தந்தி 7 May 2018 4:30 AM IST (Updated: 7 May 2018 1:11 AM IST)
t-max-icont-min-icon

‘நீட்’ தேர்வுக்கு விலக்கு கோரி தொடர் போராட்டங்கள் நடத்த வேண்டும் என்று திராவிடர் கழக மகளிர் மாநாட்டில் கி.வீரமணி பேசினார்.

மடத்துக்குளம்,

திராவிடர் கழக மகளிர் அணி மற்றும் திராவிட மகளிர் பாசறை இணைந்து நடத்திய திராவிட மகளிர் எழுச்சி மாநாடு திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தை அடுத்த கணியூரில் நடைபெற்றது. மாநாட்டில் பகுத்தறிவுக் கலை நிகழ்ச்சிகள், சிலம்பம் உள்ளிட்ட தற்காப்பு கலைகளை மகளிர் நடத்தி காட்டினார்கள். மேலும் பெண்ணினம் விடுதலை பெற மூட நம்பிக்கைகளை ஒழிப்போம் என்பது உள்பட பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கத்துக்கு திராவிடர் கழக பிரசார செயலாளர் அருள்மொழி தலைமை தாங்கினார்.

நிகழ்ச்சியில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசியதாவது:-

‘நீட்’ தேர்வில் தமிழக மாணவர்களை மத்திய அரசு பழிவாங்கிக்கொண்டிருக்கிறது. சில அவசர அநியாய தீர்ப்புகள் அதற்கு உறுதுணையாக இருக்கின்றன. ‘நீட்’ தேர்வு வேண்டாம் என்று எதிர்க்கும் தமிழர்களை தண்டிக்க அவர்களை ராஜஸ்தான் போன்ற வெளி மாநிலங்களில் மையங்கள் அமைத்து பழிவாங்கும் செயலில் ஈடுபடுகிறது. இவ்வாறு வெளி மாநிலங்களுக்கு சென்று தேர்வு எழுதும் மாணவர்களுக்கு செய்யும் உதவி முதலுதவியாக மட்டுமே இருக்க வேண்டும்.

கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு கொண்டு வரவேண்டும். மேலும் தமிழக அரசு முதுகெலும்போடு முடிவெடுக்க வேண்டும். ‘நீட்’ தேர்வுக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த 2 மசோதாக்களின் நிலை என்ன? அந்த மசோதாக்கள் மறக்கடிக்கப்பட்டு விட்டன. தற்போது தமிழக மாணவர்கள் தமிழகத்திலேயே ‘நீட்’ தேர்வு எழுத வேண்டும் என்று திசை திருப்பும் வேலை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. எனவே ‘நீட்’ தேர்வுக்கு விலக்கு கோரி தொடர் போராட்டங்கள் நடத்தப்பட வேண்டும். 21 ஆண்டுகள் போராடி நுழைவுத்தேர்வு கூடாது என்று ஜனாதிபதி ஒப்புதலுடன் கருணாநிதி நடைமுறைப்படுத்தினார். இந்த நிலையில் ‘நீட்’ தேர்வு என்பதே சட்ட விரோதமாகும்.

மேலும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிக அளவில் பா.ஜ.க.வினரால் நடத்தப்படுகிறது. அவர்கள் பெண்களை வெறும் பண்டங்களாகத்தான் பார்க்கிறார்கள். எனவே பா.ஜ.க.வை தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியாவிலேயே இல்லாமல் துடைத்தெரிய வேண்டும். பாட்டுப்பாடியவரை தேடிப்பிடித்து கைது செய்த காவல்துறைக்கு எஸ்.வி.சேகர் கண்ணுக்கு தெரியவில்லை. அத்துடன் பெண்களுக்கு சம உரிமை என்பது 50 சதவீதம் உரிமை என்பதல்ல. ஆண்கள் அனுபவிக்கும் அளவுக்கு உரிமை வேண்டும்.

எல்லோருக்கும் விடுதலை கொடுத்தது தந்தை பெரியாரின் இயக்கம். பெண்களுக்கு எதிரான பழைய பழமொழிகளை ஒழிக்க வேண்டும். வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப்போகும் என்பார்கள். அவர்களே பொம்பளை சிரிச்சாப்போச்சி, புகையிலை விரிச்சாப்போச்சி என்பார்கள். உயிரினங்களில் மனிதனுக்கு மட்டுமே சிரிக்கத்தெரியும், சிரிக்கும் உரிமை கூட பெண்களுக்கு மறுக்கப்பட்டிருக்கிறது.

வீட்டில் உள்ள ஆண்குழந்தைக்கு கறியாக எடுத்து போட்டு விட்டு பெண் குழந்தைக்கு வெறும் எலும்பை எடுத்துப்போடுவார்கள். அது மட்டுமின்றி பெண் குழந்தைகளுக்கு விளையாட செப்பு சாமான்கள் கொடுப்பார்கள். ஆண் குழந்தைகளுக்கு துப்பாக்கி, கார் போன்ற விளையாட்டு பொருட்களை கொடுப்பார்கள். ஆனால் தற்போது பெண்கள் துப்பாக்கி ஏந்தும் காலம் வந்து விட்டது. தற்போது பெண்கள் தற்காப்புக்காக துப்பாக்கி வைத்துக்கொள்ள வேண்டிய நிலை உள்ளது. எனவே துப்பாக்கி லைசென்ஸ் கிடைக்கும் வரை கத்தி வைத்துக்கொள்ளுங்கள். அதுவும் இல்லை என்றால் தற்காப்புக்காக மிளகாய்ப்பொடி வைத்துக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு கி.வீரமணி பேசினார்.

இதைத்தொடர்ந்து மாலையில் கடத்தூர் ரோட்டில் திராவிட மகளிர் எழுச்சி பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் சிலம்பம், வீர விளையாட்டுகள், போர்ப்பறையாட்டம் நடைபெற்றது. பின்னர் கணியூர் பெரியார் திடலில் திறந்த வெளியில் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் மந்திரமா, தந்திரமா என்ற தலைப்பில் குடந்தை ஜெயமணிக்குமார் பேசினார். மேலும் பெண்களை இழிவுபடுத்தும் மனுதர்மத்தை ஒழிப்போம் என்பது உள்பட பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்கம் நடைபெற்றது. 

Next Story