கூடலூர் அருகே குடிசை வீடுகளை சூறையாடிய காட்டு யானைகள், ஆதிவாசி மக்கள் கவலை


கூடலூர் அருகே குடிசை வீடுகளை சூறையாடிய காட்டு யானைகள், ஆதிவாசி மக்கள் கவலை
x
தினத்தந்தி 6 May 2018 10:00 PM GMT (Updated: 6 May 2018 7:41 PM GMT)

கூடலூர் அருகே ஊருக்குள் புகுந்த காட்டு யானைகள் ஆதிவாசி மக்களின் குடிசை வீடுகளை சூறையாடின. இதனால் அவர்கள் கவலை அடைந்து உள்ளனர்.

கூடலூர்,

கூடலூர் பகுதியில் காட்டு யானைகளால் தினமும் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகிறது. வீடுகளை உடைத்து சேதப்படுத்துதல், பொதுமக்களை தாக்குதல், விவசாய பயிர்களை தின்று நாசம் செய்தல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வருகிறது. சில சமயங்களில் மனித உயிரிழப்புகளும் நிகழ்ந்து விடுகிறது. இதனால் எந்த நேரத்தில் காட்டு யானைகள் வருமோ? என்ற பீதியில் பொதுமக்கள் வீடுகளில் தஞ்சம் அடைய வேண்டிய நிலை தொடருகிறது.

கூடலூர் தாலுகா தேவர்சோலை பேரூராட்சி பாடந்தொரை, கர்க்கப்பாலி, கடம்பக்கொல்லி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில வாரங்களாக 6 காட்டு யானைகள் முகாமிட்டு அட்டகாசம் செய்து வருகின்றன. இந்த யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என பொதுமக்கள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

கடந்த சில தினங்களுக்கு முன்பு ரமேஷ் என்ற வாலிபரை காட்டு யானை தாக்கி கொன்றது. இதை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல் செய்தனர். பின்னர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி காட்டு யானைகளை விரட்ட நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டது. இந்த நிலையில் கடம்பக்கொல்லி ஆதிவாசி காலனிக்குள் நேற்று முன்தினம் நள்ளிரவு 2 காட்டு யானைகள் புகுந்து வீடுகளை முற்றுகையிட்டன. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்துடன் வீடுகளில் பதுங்கி இருந்தனர். இந்த சமயத்தில் அதே பகுதியை சேர்ந்த ரஞ்சி (வயது 47), மாதன் (46) ஆகியோரது குடிசை வீடுகளை சூறையாடின. அப்போது வீடுகளில் இருந்த ரஞ்சி, மாறன் குடும்பத்தினர் அங்கிருந்து தப்பி ஓடினர். இதனால் அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இதையடுத்து, அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்து காட்டு யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். இதனிடையே காட்டு யானைகள் சூறையாடிய குடிசை வீடுகளை சீரமைக்க பணம் இல்லாத சூழலில் ஆதிவாசி மக்கள் கவலை அடைந்து உள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-

தினமும் கூலி வேலைக்கு சென்று பிழைப்பு நடத்தி வருகிறோம். இதில் காட்டு யானைகள் அடிக்கடி கிராமத்துக்குள் வந்து வீடுகளை இடித்து விடுகிறது. இதற்கு முறையாக இழப்பீடும் வனத்துறையினர் தருவது இல்லை. இதனால் வீட்டை சீரமைக்க முடியாமல் பாதிக்கப்பட்டு வருகிறோம். எனவே சேதம் அடைந்த வீடுகளுக்கு உரிய இழப்பீடு தொகை கிடைக்க வனத்துறை உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர். 

Next Story