எர்ணாகுளத்தில் மாணவனின் தந்தை மரணம்: நீட்தேர்வை ரத்து செய்யக்கோரி அரசியல் கட்சியினர் சாலைமறியல்


எர்ணாகுளத்தில் மாணவனின் தந்தை மரணம்: நீட்தேர்வை ரத்து செய்யக்கோரி அரசியல் கட்சியினர் சாலைமறியல்
x
தினத்தந்தி 7 May 2018 4:30 AM IST (Updated: 7 May 2018 1:34 AM IST)
t-max-icont-min-icon

எர்ணாகுளத்தில் நீட் தேர்வு எழுத சென்ற மாணவனின் தந்தை மாரடைப்பால் மரணம் அடைந்ததை தொடர்ந்து நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி அரசியல் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் திருத்துறைப்பூண்டியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருவாரூர்,

நீட் தேர்வு எழுதுவதற்காக மகன் கஸ்தூரிமகாலிங்கத்தை கேரளமாநிலம் எர்ணாகுளத்துக்கு அழைத்துச்சென்ற திருத்துறைப்பூண்டி விளக்குடியை சேர்ந்த கிருஷ்ணசாமி மாரடைப்பால் அங்கு மரணம் அடைந்தார். இதையடுத்து நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி திருத்துறைப்பூண்டி- மன்னார்குடி சாலையில் விளக்குடி கைாட்டி என்ற இடத்தில் சாலைமறியல் நடைபெற்றது.

இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி, தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், த.மா.கா., தே.மு.தி.க. உள்ளிட்ட அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். அப்போது சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் நீட்தேர்வை மத்திய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர்.

போக்குவரத்து பாதிப்பு

இதையடுத்து திருவாரூர் துணை போலீஸ் சூப்பிரண்டு இனிக்கோதிவ்யன், தாசில்தார் மகேஷ்குமார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து சாலைமறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இந்த சாலைமறியல் போராட்டத்தால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Next Story