‘நீட்’ தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து செல்போன் கோபுரத்தின் மீது ஏறி போராட்டம் நடத்திய தி.மு.க. பிரமுகர்


‘நீட்’ தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து செல்போன் கோபுரத்தின் மீது ஏறி போராட்டம் நடத்திய தி.மு.க. பிரமுகர்
x
தினத்தந்தி 6 May 2018 11:00 PM GMT (Updated: 6 May 2018 8:05 PM GMT)

‘நீட்‘ தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து 200 அடி உயர செல்போன் கோபுரத்தின் மீது ஏறி தி.மு.க. பிரமுகர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம்,

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள கணக்குப்பட்டியை சேர்ந்தவர் கோபால் (வயது 48). இவர் கணக்குப்பட்டி தி.மு.க. கிளை செயலாளராக உள்ளார். இந்த நிலையில் நேற்று மதியம் 2 மணியளவில் திடீரென்று கோபால் தாரமங்கலம் பஸ் நிலையம் பின்புறம் உள்ள 200 அடி உயரமுள்ள தனியார் செல்போன் கோபுரத்தின் மீது ஏறினார். செல்போன் கோபுரத்தின் உச்சிக்கு சென்ற அவர் ‘நீட்‘ தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தான் தற்கொலை செய்து கொள்வதாக கோஷமிட்டார். இவரது சத்தத்தை கேட்டு அப்பகுதியில் பொதுமக்கள் திரண்டனர்.

அவரை கீழே இறங்கி வருமாறு பொதுமக்கள் கூறினார்கள். ஆனால் அவர் செல்போன் கோபுரத்தில் இருந்து கீழே இறங்கி வர மறுத்து விட்டார். இது குறித்து தகவல் அறிந்ததும் தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் அம்மாசி, மேற்கு ஒன்றிய செயலாளர்(பொறுப்பு) ரவிகுமார், நகர செயலாளர் குப்பு என்கிற குணசேகரன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இதனிடையே ஓமலூர் தீயணைப்பு படைவீரர்களும், தாரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தட்சிணாமூர்த்தி மற்றும் போலீசாரும் அங்கு வந்தனர்.

பின்னர் அம்மாசி, கோபாலை கீழே இறங்கி வருமாறும், அறவழியில் போராடலாம் என்று அழைத்தார். அதை ஏற்று கோபால் செல்போன் கோபுரத்தில் இருந்து கீழே இறங்கி வந்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

‘நீட்‘ தேர்வில் தமிழக மாணவர்களை வெளிமாநிலங்களுக்கு தேர்வு எழுத அனுப்பியது, தேர்வு எழுதிய மாணவரின் தந்தை கேரளாவில் இறந்த சம்பவம் என் மனதை மிகுந்த வேதனைக்குள்ளாக்கியது. அதே நேரத்தில் வடமாநில மாணவர்கள் யாரும் தமிழகத்துக்கு தேர்வு எழுத வரவில்லை. நீட் தேர்வு விஷயத்தில் தமிழகத்துக்கு அநீதி விளைவித்த மத்திய, மாநில அரசுகளை கண்டித்து நான் எனது உயிரை மாய்த்து கொள்ளவே செல்போன் கோபுரம் மீது ஏறினேன். அம்மாசி அறவழியில் போராடலாம் என்று கூறியதால் என் முடிவை மாற்றி கொண்டு கீழே வந்தேன். நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தே எனது போராட்டத்தை நடத்தினேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Next Story