காங்கிரஸ் பிரமுகர் கொலை தொடர்பாக விசாரணைக்காக அழைத்து சென்றவர்களை விடுவிக்க கோரி மறியல்


காங்கிரஸ் பிரமுகர் கொலை தொடர்பாக விசாரணைக்காக அழைத்து சென்றவர்களை விடுவிக்க கோரி மறியல்
x
தினத்தந்தி 6 May 2018 11:15 PM GMT (Updated: 6 May 2018 8:27 PM GMT)

காங்கிரஸ் பிரமுகர் பாண்டியன் கொலை வழக்கில் விசாரணைக்காக போலீசாரால் பிடித்து சென்றவர்களை விடுவிக்கக்கோரி முத்தியால்பேட்டை போலீஸ் நிலையம் முன்பு சாலை மறியல் போராட்டம் நடந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

புதுச்சேரி,

புதுவை குருசுக்குப்பத்தை சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் பாண்டியன் (வயது46) நேற்று அதிகாலை மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து பெரியகடை போலீசார் மற்றும் சிறப்பு அதிரடிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்தநிலையில் சிறப்பு அதிரடிப்படை போலீசார் பாண்டியன் கொலை வழக்கு தொடர்பாக குருசுக்குப்பம் பகுதியை சேர்ந்த சிலரை முத்தியால்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

இதுபற்றி அறிந்தவுடன் போலீசாரால் விசாரணைக்கு அழைத்தச் செல்லப்பட்டவர்களின் குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் 50-க்கும் மேற்பேட்டோர் முத்தியால்பேட்டை போலீஸ் நிலையம் முன்பு திரண்டனர்.

அவர்கள் பாண்டியன் கொலைக்கும் போலீசாரால் அழைத்து செல்லப்பட்டவர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. எனவே போலீசாரால் விசாரணைக்கு அழைத்தவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டுமென கூறினார்கள்.

அப்போது போலீசார் தரப்பில் கூறுகையில், ‘பாண்டியன் கொலை குறித்து விசாரிக்கதான் அவர்களை அழைத்து வந்திருக்கிறோம். விசாரணை முடிந்தவுடன் அனுப்பி விடுவோம்’ என்றனர். ஆனால் போலீசாரின் சமாதானத்தை அவர்கள் ஏற்க மறுத்து முத்தியால்பேட்டை போலீஸ் நிலையம் முன்பு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதையடுத்து போக்குவரத்து மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டது.

இதுபற்றி அறிந்தவுடன் கிழக்குப்பகுதி போலீஸ் சூப்பிரண்டு வெங்கடசாமி, முத்தியால்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹேமச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் ஆகியோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். அதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் மறியலை கைவிட்டு கலைந்துசென்றனர். இந்த சம்பவம் காரணமாக முத்தியால்பேட்டை பகுதியல் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story