பஸ் மோதி கணவன்-மனைவி பலி: ஆஸ்பத்திரி ஊழியர்கள் சாலைமறியல்


பஸ் மோதி கணவன்-மனைவி பலி: ஆஸ்பத்திரி ஊழியர்கள் சாலைமறியல்
x
தினத்தந்தி 7 May 2018 4:00 AM IST (Updated: 7 May 2018 1:57 AM IST)
t-max-icont-min-icon

புதுவையில் தமிழக அரசு பஸ் மோதி கணவன்-மனைவி பலியானார்கள். அரசு ஆஸ்பத்திரி அருகே சிக்னல்கள், வேகத்தடை உள்ளிட்டவைகள் அமைக்க வலியுறுத்தி ஆஸ்பத்திரி ஊழியர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள்.

புதுச்சேரி,

புதுவை கோவிந்தசாலை பகுதியை சேர்ந்தவர் சங்கர் (வயது 40), கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி மகாலட்சுமி (35). இவர் ராஜீவ்காந்தி மகளிர் மற்றும் குழந்தைகள் ஆஸ்பத்திரியில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்தார்.

சங்கர் தனது மனைவியை மகாலட்சுமியை நேற்று இரவு பணிக்காக ராஜீவ்காந்தி ஆஸ்பத்திரிக்கு மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார். ஆஸ்பத்திரி அருகே வந்தபோது அந்த பகுதியில் உள்ள வளைவு ஒன்றில் மோட்டார் சைக்கிளை திருப்பியபோது புதுவையில் இருந்து திருப்பதி நோக்கிச்சென்ற தமிழக அரசு பஸ் ஒன்று எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள்மீது மோதியது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்த கணவன்-மனைவி தூக்கிவீசப்பட்டனர். இதில் பலத்த காயம் அடைந்த சங்கர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த மகாலட்சுமியை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆஸ்பத்திரியில் அவரை பரிசோதித்த டாக்டர்கள் மகாலட்சுமி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

கணவன்-மனைவியில் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுசெல்லப்பட்டது. இதுகுறித்து கோரிமேடு போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதுபற்றி அறிந்தவுடன் மகாலட்சுமியுடன் ஆஸ்பத்திரியில் பணியாற்றும் சக ஊழியர்கள் திடீரென ராஜீவ்காந்தி ஆஸ்பத்திரி முன்பு மெயின்ரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுபற்றி அறிந்தவுடன் ரெட்டியார்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது மறியலில் ஈடுபட்டவர்கள் ஆஸ்பத்திரி உள்ள சாலையில் சிக்னல்கள், வேகத்தடை, தடுப்பு கட்டைகள் உள்ளிட்டவைகள் அமைக்க வேண்டுமென கோரிக்கையை வலியுறுத்தினார்கள்.

அப்போது போலீசார் அரசிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார்கள். அதையடுத்து அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்துசென்றனர். இந்த சம்பவம் காரணமாக சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Next Story