கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளில் பட்டுப்போய் காட்சியளிக்கும் தென்னை மரங்கள்: விவசாயிகள் கவலை
கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில், பருவமழை பொய்த்துப்போனதால் தென்னை மரங்கள் பட்டுப்போய் காட்சியளிக்கின்றன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
உத்தமபாளையம்,
கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் முல்லைப்பெரியாறு பாசனம் மூலம் சுமார் 14 ஆயிரத்து 707 ஏக்கர் நிலங்களில் இருபோக நெல் சாகுபடி நடைபெற்றது. இதை தவிர முல்லைப்பெரியாற்றில் ஆண்டு முழுவதும் தண்ணீர் வற்றாமல் ஓடுகிறது. இதன் மூலம் இந்த பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் சீராகவே இருக்கும்.
இதன் காரணமாக கருப்பு திராட்சை, வாழை, தென்னை உள்ளிட்ட விவசாயம் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. கடந்த 3 ஆண்டுகளாக எதிர்பார்த்த அளவு பருவமழை இல்லாததால் இந்த பகுதியில் தொடர்ந்து முதல் போக நெல் சாகுபடி நடைபெறவில்லை.
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருவதால் அணையில் இருந்து குடிநீருக்காக வினாடிக்கு 100 கனஅடி தண்ணீர் மட்டும் திறக்கப்படுகிறது. பருவமழை பொய்த்து போனதால் நீர்நிலைகள் வறண்டு போனது. இதனால் இந்த பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விட்டது.
கிணற்றில் போதுமான அளவு தண்ணீர் இல்லாததால் விவசாய நிலங்களுக்கும் தண்ணீர் பாய்ச்ச முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கம்பம், உத்தமபாளையம், கோம்பை, தேவாரம் பகுதிகளில் தென்னை மரங்கள் தண்ணீரின்றி கருகி வருகின்றன. பல ஆண்டுகள் பலன் தந்த தென்னை மரங்கள் பட்டுபோய் பரிதாபமாக காட்சியளிப்பது விவசாயிகளை கவலையடைய செய்துள்ளது. எனவே பட்டுப்போன தென்னை மரங்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்கவேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் முன்பு எப்போதும் இல்லாத வகையில் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பருவமழை பொய்த்து போனதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகிறது. இதனால் கிணற்று பாசனம் மூலம் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது.
கடந்த 3 ஆண்டுகளாக எதிர்பார்த்த அளவு பருவமழை பெய்யாததால் ஏராளமான தென்னை மரங்கள் பட்டுப்போயின. மழை இன்றி இதே நீடித்தால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிப்பு அடைந்து மாற்று தொழில் தேடி திருப்பூர் மற்றும் கேரள மாநிலத்திற்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பாதிப்பு அடைந்த விவசாயிகளை கண்டறிந்து தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றனர்.
Related Tags :
Next Story