நாமக்கல்லில் சரக்கு ஆட்டோ கிணற்றில் கவிழ்ந்து வியாபாரி பலி


நாமக்கல்லில் சரக்கு ஆட்டோ கிணற்றில் கவிழ்ந்து வியாபாரி பலி
x
தினத்தந்தி 7 May 2018 4:15 AM IST (Updated: 7 May 2018 3:03 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல்லில் சரக்கு ஆட்டோவை ஓட்டி பழக முயன்ற போது கிணற்றில் கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானதில் வியாபாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

நாமக்கல்,

நாமக்கல் டவுன் மோகனூர் சாலையில் உள்ள கொண்டிசெட்டிப்பட்டி, குறிஞ்சி நகர் பகுதியில் வசித்து வருபவர் செல்வராஜ் (வயது 55). இவர் லாரி பழைய டயர் மற்றும் டயர் மவுத்தை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். செல்வராஜ், நேற்று அதிகாலை அவரது அக்கா மகன் பிரகாசுடன் வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பி உள்ளார். அதன் பின்னர் பிரகாஷ் அவரது ஆட்டோவை செல்வராஜின் வீட்டிற்கு அருகே நிறுத்திவிட்டு அவரது வீட்டிற்கு சென்று உள்ளார்.

பின்னர் காலை 7 மணியளவில் வீட்டின் அருகே இருந்த ஆட்டோவை ஓட்டி பழக நினைத்த செல்வராஜ், ஆட்டோவில் ஏறி இயக்கி உள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக சரக்கு ஆட்டோ அவரது வீட்டின் அருகே இருந்த 80 அடி ஆழ கிணற்றில் கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானது.

தகவல் அறிந்த நாமக்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் குலசேகரன் தலைமையிலான போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிணற்றில் இருந்து செல்வராஜ் மற்றும் சரக்கு ஆட்டோவை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு பொக்லைன் எந்திரம் மற்றும் பொதுமக்கள் உதவியோடு ஆட்டோ கிணற்றில் இருந்து வெளியே எடுக்கப்பட்டது.

மேலும் வியாபாரி செல்வராஜ் உயிரிழந்த நிலையில் ஆட்டோவில் இருந்து மீட்கப்பட்டார். செல்வராஜ் உயிரிழந்ததை கண்ட அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். பின்னர் செல்வராஜின் உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் தலைமை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், செல்வராஜ் சரக்கு ஆட்டோவை ஓட்டி பழக முயன்றபோது விபத்தில் சிக்கி உயிரிழந்தது தெரியவந்து உள்ளது. மேலும் பிரேக்கிற்கு பதிலாக ஆக்சிலேட்டரை செல்வராஜ் மிதித்ததால் ஆட்டோ அதிவேகமாக சென்று சுற்றுச்சுவரை இடித்து கொண்டு கிணற்றிக்குள் பாய்ந்து இருக்கலாம் எனவும் போலீசார் கருதுகின்றனர். இது குறித்து நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story