கேரளாவில் மையம் ஒதுக்கப்பட்டதால் நீண்ட தூர பயணம் செய்து, மன உளைச்சலுடன் ‘நீட்’ தேர்வு எழுதினோம்


கேரளாவில் மையம் ஒதுக்கப்பட்டதால் நீண்ட தூர பயணம் செய்து, மன உளைச்சலுடன் ‘நீட்’ தேர்வு எழுதினோம்
x
தினத்தந்தி 6 May 2018 10:45 PM GMT (Updated: 6 May 2018 9:34 PM GMT)

“கேரளாவில் மையம் ஒதுக்கப்பட்டதால், நீண்ட தூர பயணம் செய்து, மன உளைச்சலுடன் ‘நீட்’ தேர்வு எழுதினோம்” என்று குமரி மாணவிகள் கருத்து தெரிவித்தனர்.

நாகர்கோவில்,

மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கான ‘நீட்‘ எனப்படும் தேசிய நுழைவுத்தேர்வு நேற்று நாடு முழுவதும் நடந்தது. ‘நீட்‘ தேர்வுக்காக தமிழகத்தில் சென்னை, மதுரை, நெல்லை உள்பட 10 நகரங்களில் 170 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. தமிழகத்தில் ஒரு லட்சத்து 7 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதினார்கள்.

தமிழகத்தில் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்த ஏராளமான மாணவ-மாணவிகளுக்கு கேரளா, ராஜஸ்தான் போன்ற வெளி மாநிலங்களில் உள்ள மையங்கள் ஒதுக்கப்பட்டு இருந்தது. அவர்கள் அங்கு சென்று தேர்வு எழுதினார்கள். தமிழகத்தை சேர்ந்த மாணவர்களுக்கு, வெளிமாநிலங்களில் ‘நீட்‘ தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்ட விஷயம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இதை தொடர்ந்து, வெளிமாநிலங்களில் நீட் தேர்வு எழுத சென்ற மாணவர்களுக்கு பயண கட்டணத்துடன், ரூ.1000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. குமரி மாவட்டத்தில் இருந்து ரெயில் மூலமாக கேரளாவுக்கு நீட் தேர்வு எழுத சென்ற மாணவ-மாணவிகளின் வசதிக்காக, நாகர்கோவிலில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகுளம் வழியாக மங்களூர் செல்லும் ஏர்நாடு எக்ஸ்பிரஸ் ரெயிலின் நேரம் மாற்றி அமைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

குமரி மாவட்டத்தை சேர்ந்த 842 மாணவ-மாணவிகள் நேற்று கேரள மாநிலம் திருவனந்தபுரம், எர்ணாகுளம் ஆகிய இடங்களில் ஒதுக்கப்பட்டிருந்த தேர்வு மையங்களில் நீட் தேர்வை எழுதினர். காலை 10 மணிக்கு தொடங்கிய தேர்வு மதியம் 1 மணிவரை நடந்தது. தொடர்ந்து, தேர்வு எழுதிவிட்டு வந்த குமரி மாணவிகளிடம் கருத்து கேட்ட போது, கேரளாவில் மையம் ஒதுக்கப்பட்டதால் நீண்ட தூர பயணம் செய்து மன உளைச்சலுடன்நீட் தேர்வை எழுதியதாக மன குமுறலுடன் கருத்து தெரிவித்தனர். அவற்றின் விவரம் வருமாறு:-

குலசேகரம் நாகக்கோடு குழிவிளையை சேர்ந்த தனியார் பள்ளி மாணவி ஜெரிபா (வயது 17) :-

நீட் தேர்வு கொஞ்சம் கடினம் தான். ஆனால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு நான் பதிலளித்திருப்பது எனக்கு ஓரளவு திருப்திகரமாக இருக்கிறது. எர்ணாகுளம் மாவட்டம் ஆலுவாவில் உள்ள அமல் பொதுப்பள்ளியில் எனக்கு தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருந்தது. தேர்வுக்காக நேற்று முன்தினம் இரவே நான் தந்தையுடன் இங்கு வந்து ஓட்டலில் தங்கிவிட்டேன். காலையில், தேர்வு மையத்துக்கு செல்ல தயாரானோம். ஆனால், மொழி பிரச்சினையால் தேர்வு மையம் செல்வதற்கான வழி எங்களுக்கு தெரியவில்லை. பின்னர், செல்போனில் ‘கூகுள் மேப்‘ மூலமாக வழி கண்டறிந்து வாடகை காரில் தேர்வு மையத்துக்கு சென்றேன்.

சரியாக 10 மணிக்கு தேர்வு ஆரம்பமானது. நீட் தேர்வு எழுத செல்லும் மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசு உதவித்தொகை வழங்குவதாக அறிவித்திருக்கிறது. இது காலங்கடந்த செயலாக தெரிகிறது. தமிழகத்திலேயே நிறைய மையங்களை ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால், அவ்வாறு செய்யாமல் இவ்வளவு தூரத்தில் தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வு மையம் ஒதுக்கி இருப்பது மன உளைச்சலை ஏற்படுத்தியது. அந்த மன உளைச்சலுடன் நீட் தேர்வு எழுதினேன்.

இவ்வாறு மாணவி ஜெரிபா கூறினார்.

நாகர்கோவில் எஸ்.எல்.பி.அரசு பள்ளி மாணவி தனுசியா:-

எனக்கு, திருவனந்தபுரம் சைனிக் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருந்தது. நீட் தேர்வுக்காக தொடர்ந்து பயிற்சி எடுத்து வந்தேன். அதனால் தேர்வு எழுதியபோது எனக்கு பயம் ஏற்படவில்லை. தேர்வில், இயற்பியல், வேதியியல் பாட பிரிவுகளில் கேட்கப்பட்ட கேள்விகள் கடினமாக இருந்தது. தேர்வுக்காக கேரள மாநிலத்துக்கு வந்திருக்கும் மாணவர்களுக்கு சரியான வழிகாட்டுதல்கள் இல்லை. மேலும், நிறைய பேருக்கு வெகு தொலைவில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது. இது, மாணவ-மாணவிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தியது. நீட் தேர்வு எழுத செல்லும் மாணவ-மாணவிகளுக்கு பயணசெலவுடன் ரூ.1000 உதவித்தொகை வழங்கியது. இது எனக்கு மிகவும் உதவிகரமாக இருந்தது. மாணவர்களின் நலனுக்காக அரசு எடுத்த இந்த முயற்சிக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு மாணவி தனுசியா தெரிவித்தார்.

நாகர்கோவில் எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி ஆன்சிலின் ஜெனிட்டா:-

எர்ணாகுளம் மாவட்டம் கட்டிபரம்பு பகுதியில் உள்ள சின்மயா வித்யாலயா பள்ளியில் எனக்கு நீட் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருந்தது. இதற்காக நான் என் தாயாருடன் இன்று (அதாவது நேற்று) அதிகாலையில் தான் இங்கு வந்தேன். மலையாள மொழி பிரச்சினையால் தேர்வுமையத்துக்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டது. பின்னர், இங்குள்ள தமிழர் ஒருவரின் உதவியால் தேர்வு மையம் இருக்கும் இடத்தை அறிந்துகொண்டு அவசர, அவசரமாக புறப்பட்டேன்.

சாப்பிட வசதியில்லாமல் நானும், என் அம்மாவும் தெரு, தெருவாக அலைந்தோம். வெளிமாநிலத்துக்கு நீட் தேர்வு எழுத செல்லும் மாணவர்களுக்கான அரசு உதவித்தொகையையும் நான் வாங்கவில்லை. எங்களுடைய சொந்த செலவிலேயே எல்லாவற்றையும் செய்துகொண்டோம். தேர்வு மையத்துக்கு வெளியே தீவிர சோதனைக்கு பின்னர் மாணவ-மாணவிகள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை தேர்வு நடந்தது. நாகர்கோவிலில் இருந்து எர்ணாகுளம் வரை பயணதூரம் அதிகம். இதனால் நீண்ட தூர பயணம் செய்து மன உளைச்சலுடன் தேர்வு எழுதினேன். சில நேரங்களில் தேர்வெழுத முடியாத அளவுக்கு சோர்வினை உணர்ந்தேன்.

நமது மாநிலத்திலேயே நிறைய கட்டமைப்புடன் கூடிய பள்ளி, கல்லூரிகள் உள்ளன. அவற்றில் ஏதாவது ஒன்றில் தேர்வு மையம் அமைத்திருந்தால் கூட அங்கு சென்று தேர்வெழுதி வருவதில் சிரமம் இருக்காது. ஆனால், தேர்வுக்காக தமிழக மாணவர்கள் இவ்வளவு தூரம் வருவது அவசியமில்லாதது. அடுத்தமுறையாவது சரியாக திட்டமிட்டு, மாணவர்களின் நலனுக்கான விஷயங்களை அரசு செய்யவேண்டும்.

இவ்வாறு மாணவி ஆன்சிலின் ஜெனிட்டா கூறினார். 

Next Story